திரெளபதி முர்மு எக்ஸ் தளம்
இந்தியா

’3 மாதம் தான்’ | மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கே கெடு.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

Prakash J

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்தார். அந்த வகையில், 10 மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டன. இதற்கிடையே 2 மசோதாக்களை அவர் குடியரசுத் தலைவர் பார்வைக்கு அனுப்பி வைத்திருந்தார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டனர்.

”தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நீண்டகாலம் நிலுவையில் வைத்திருந்தது சட்ட விரோதம் என்று தீர்ப்பு அளித்தனர். அதோடு ஆளுநர் வசம் உள்ள 10 மசோதாக்களையும் அரசிதழில் வெளியிட்டு நிறைவேற்றலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்டாலின், ரவி

இந்த தீர்ப்பு மூலம் ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. மேலும், நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து 10 மசோதாக்களையும் தமிழ்நாடு அரசு சட்டமாக்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மறுபுறம், தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பின் நகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், குடியரசுத் தலைவரின் அதிகாரம் குறித்து முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில், மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடிவெடுக்காவிட்டால் அதற்கான காரணத்தை அந்தந்த மாநில அரசுகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 201-வது பிரிவின்கீழ், ஒரு மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் எதுவும் இல்லை என்பதால், மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மூன்று மாதங்களில் முடிவெடுக்காவிட்டால், மாநில அரசுகள் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும், நியாயமான காலவரம்புக்குள் முடிவு எடுக்காவிட்டால், நீதிமன்றங்கள் பார்த்துக் கொண்டிருக்காது எனவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.