தமிழகத்தில் மலைகள், காடுகள், சாலைகளில் பேனர்கள் மற்றும் விளம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையில் தேர்தல் விளம்பரங்களை செய்ய தடை கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், “சாலைகளின் ஓரங்களிலும் விளம்ப பதாகைகள் நிறையவே காணமுடியும். மலைகளில் பெயிண்ட் அடித்து அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களை எழுதி இருப்பார்கள். அதேபோல், மரங்களில் ஆனி அடித்து விளம்பர அட்டைகள் வைத்திருப்பதை பார்க்க முடியும். நெடுஞ்சாலைகளில் இத்தகைய பேனர்களை வைப்பதன் மூலம் நிறையவே விபத்துக்கள் ஏற்படுகின்றது. மலைகள் மற்றும் காடுகளில் இத்தகைய விளம்பர பேனர்களை வைப்பதால் விலங்குகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் நிறைய பிரச்னைகள் ஏற்படுகிறது” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் எல்லாம் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ்க்கு தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. மனுவில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும், தமிழகத்தையும் விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் மலைகள், காடுகள், சாலைகளில் பேனர்கள் மற்றும் விளம்பரத்திற்கு தடை விதித்தனர். அதோடு, உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை தமிழக அரசு முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.