Senthil Balaji
Senthil Balaji PT DESK
இந்தியா

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்கலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு - முழு விவரம்

PT WEB

போக்குவரத்து துறையில் வேலைக்கு பணம்பெற்றதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.

அச்சமயத்தில் போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் பேரில், செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை, கரூர், திருவண்ணாமலை, கும்பகோணம் என செந்தில் பாலாஜிக்கு சொந்தமான அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.

செந்தில் பாலாஜி

அதில், மோசடி நடைபெற்ற காலகட்டத்தில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், தங்க நகைகளின் ரசீதுகள், ஆபரணங்கள், வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பெற்ற சுய விபரக் குறிப்புகள், நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள், பெற்ற பணம் குறித்த விபரங்களின் பட்டியல் கைப்பற்றப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோசடி தொடர்பாக மூன்று வழக்குகள் பதியப்பட்டன. அதில் ஒரு வழக்கில் செந்தில்பாலாஜி, அவரது அண்ணன் அசோக் குமார் , உதவியாளர் சண்முகம், போக்குவரத்து கழக பணியாளர் ராஜ்குமார் ஆகியோர் மீது நேரடியாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து இந்த மூன்று வழக்குகளிலும் சென்னையில் உள்ள, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் பணம் கிடைத்துவிட்டதாக கூறியதையும், சமரசமாக போக விரும்புவதாகவும் கூறியதை ஏற்று செந்தில்பாலாஜி, அவரது அண்ணன் அசோக் குமார் , உதவியாளர் சண்முகம், போக்குவரத்து கழக பணியாளர் ராஜ்குமார் ஆகிய நால்வர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

செந்தில் பாலாஜி

மேலும் செந்தில்பாலாஜி, அவரது அண்ணன் அசோக்குமார் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை எனவும் தெரிவித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி பொறியாளர் தர்மராஜ் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வழங்க முன்னாள் அமைச்சர் முடிவெடுத்ததன் காரணமாக தகுதியான மாணவர்கள் பணியில் சேர முடியவில்லை எனவும் தங்களது மதிப்பெண் குறைத்து காட்டப் பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டதுசமூகத்தை பாதிக்கும் குற்றங்கள் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது, ஆனால் குற்றத்தின் வீரியத்தை உணர்ந்தும் அரசுத்தரப்பு இந்த வழக்கில் சமரசத்திற்கு ஏற்றுக்கொண்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

அதேபோல, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி ஒய்.பாலாஜி, ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில் கார்த்திகை ராஜன் ஆகியோர் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுகள் பல கட்டங்களாக விசாரிக்கப்பட்டு,

சமரசமாக செல்வது என்ற காரணத்திற்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது என்று கூறி பண மோசடி தொடர்பான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இந்த முறைகேடு தொடர்பான வழக்கு மீண்டும் தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரிக்கவும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியவும் உத்தரவிடப்பட்டது.

supreme court

ஆனால், செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதியாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் வேலைக்காக லஞ்சம் பெற்ற விவகாரத்தில் செந்தில்பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியாத சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில் கார்த்திகை ராஜன் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேவேளையில், இந்த லஞ்ச விவகாரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதிக்ககோரியும், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது எதிர்த்து அமலக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. \

Minister Senthil Balaji

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனு மீது, பதிலளிக்க சென்னை குற்றப்பிரிவு காவல்துறை (job racketing wing), சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை உதவி ஆணையர் சுரேந்திரன், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர்கள் ரெஜினா மற்றும் கலாராணி ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

அதேவேளையில் இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இணைத்து விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வும் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, நீதிபதிகள் கிருஷ்ணமுராரி, ராமசுப்பிரமணியன் அடங்கிய சிறப்பு அமர்வில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு விசாரிக்கப்பட்டது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதிட்டது. அதேபோல், செந்தில் பாலாஜி சார்பில், சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச்சட்டத்தின் 50, 63வது பிரிவுகளை எதிர்த்து ரிட் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், அமலக்கதுறைக்கு ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை தற்போது தீர்மானிக்க முடியாது என கூறப்பட்டது.

அதற்கு, அமலக்கத்துறை தரப்பில், சொலிசிட்டர் அந்த ரிட் மனுவுக்கும், இந்த வழக்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தவே செந்தில் பாலாஜி தரப்பு முயல்வதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாதம் மற்றும் பிரதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி மற்றும் ராமசுப்பிரமணியம் ஆகியோர் கோடை விடுமுறை காலத்தில் ஓய்வு பெற உள்ள நிலையில் இன்றைய தினம் வழங்கியது. அதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான போக்குவரத்துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக மீண்டும் விசாரணையை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவைப்பட்டால் சிறப்பு விசாரணை குழுவை அமைத்துக் கொள்ளலாம் என்றும் இது தொடர்பான நிலவர அறிக்கையை இரண்டு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.