இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுக : உச்சநீதிமன்றம் உத்தரவு

புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுக : உச்சநீதிமன்றம் உத்தரவு

webteam

புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை அனைத்து மாநிலங்களும் திரும்பப் பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டதால், மாநிலங்களை கடந்து புலம்பெயர்ந்து பணிபுரிந்த தொழிலாளர்கள், வருமானம் இன்றி தவித்தனர். இதனால் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப நினைத்தனர். ஆனால் போக்குவரத்து வசதிகள் இல்லை.

இதனால் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் அவர்கள் நடந்தே சென்றனர். அவ்வாறு சென்ற ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பொதுமுடக்கத்தை மீறியதாக வழக்குகள் பதியப்பட்டன. அத்துடன் அவர்கள் உணவின்றி தவித்தது, சாலையில் செல்லும்போது இறந்தது உள்ளிட்ட செய்திகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பொதுமுடக்கத்தை அத்துமீறியதாக பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. அத்துடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கோரும் சிறப்பு ரயில்களை 24 மணி நேரத்திற்குள் ஏற்பாடு செய்ய ரயில்வேதுறைக்கு உத்தரவு பிறப்பித்தது.

அப்போது தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்த மத்திய அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக மாநில அரசுகள் 171 ரயில்களை கோரியுள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் கண்டறிந்து சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.