இந்தியா

சிம் நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகை பாக்கியும்.. உச்சநீதிமன்றத்தின் கண்டனமும்..

சிம் நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகை பாக்கியும்.. உச்சநீதிமன்றத்தின் கண்டனமும்..

webteam

உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பை அடுத்து, செல்போன் சேவை நிறுவனங்கள் அரசுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சிம்கார்டு நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்டவை அலைக்கற்றை அங்கீகாரம் மற்றும் அலைக்கற்றை பயன்பாடு உள்ளிட்டவற்றிற்காக அரசுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இவ்வாறு செலுத்த வேண்டிய தொகையை ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா உள்ளிட்ட 15 நிறுவனங்கள் செலுத்தவில்லை.

இதனையடுத்து ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்ட 15 செல்போன் சேவை நிறுவனங்கள் அரசுக்குச் சேர வேண்டிய ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடியை ஜனவரி 23ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கடந்தாண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அத்தொகை, கெடு தேதி முடிந்தும் செலுத்தப்படாத நிலையில் கூடுதல் அவகாசம் கேட்டு செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், தங்கள் உத்தரவை மதிக்காத நிறுவனங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் தங்கள் உத்தரவைச் செயல்படுத்தாததுடன் அதை நிறுத்திவைக்க உத்தரவிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயல் குறித்தும் நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா என நீதிபதிகள் காட்டமாகக் கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து வழக்கை மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதைத் தொடர்ந்து செல்போன் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை நள்ளிரவுக்குள் செலுத்த வேண்டும் என நேற்றிரவு தொலைத் தொடர்புத் துறை அவசர உத்தரவு பிறப்பித்தது.

முன்னதாக, ஏர்டெல் நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில் 10 ஆயிரம் கோடி ரூபாயை பிப்ரவரி 20ஆம் தேதி செலுத்திவிடுவதாகவும், மீதமுள்ள தொகையை மார்ச் மாதம் 17ஆம் தேதிக்குள் செலுத்துவதாகவும் தெரிவித்திருந்தது. எனினும் வோடாஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் அரசுக்கு தொகையை செலுத்துவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தவிர பொதுத்துறை நிறுவனங்கள் சிலவும் அரசிற்கு பெருந்தொகையை செலுத்த வேண்டியுள்ளது. இவ்விரு தரப்பும் சேர்ந்து அரசுக்கு 4 லட்சம் கோடி ரூபாயை செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.