மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டு, 24,640 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வினை 23 லட்சம் பேர் எழுதினர். இதில் 24 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசு ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை முடிந்து கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பின்போது, “சட்டவிரோதமாக நடைபெற்ற 2016-ஆம் ஆண்டு ஆசிரியர் பணிநியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. முறைகேடாக பணியில் சேர்ந்த 25,753 ஆசிரியர்கள், பணியாளர்கள் தாங்கள் பெற்ற சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவற்றை 12 சதவீத வட்டியுடன் 4 வாரத்தில் திரும்பிச் செலுத்த வேண்டும்” என உத்தரவிடப்பட்டது. மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன செயல்முறை குறித்து விசாரித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடைவிதித்து கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. பின், இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், “ஆசிரியர் பணியிடத்துக்கான ஒட்டுமொத்த தேர்வு நடைமுறையுமே குறை உடையதாகவும், களங்கம் ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துஉள்ளன. அதை மூடிமறைக்க செய்யப்பட்ட முயற்சிகள், பணியிட தேர்வு நடைமுறைக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்திவிட்டன. தேர்வின் நம்பகத்தன்மை மற்றும் நியாயம் நீர்த்துப்போய்விட்டது. எனவே, 25,753 ஆசிரியர் மற்றும் இதர பணியாளர்களின் தேர்வு செல்லாது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறோம். அதேநேரம் சில மாற்றங்களையும் செய்துள்ளோம். அதன்படி, நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட ஊழியர்கள், இதுவரை பெற்ற சம்பளம் மற்றும் பிற ஊதியங்களைத் திருப்பித் தரத் தேவையில்லை. சில மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தளர்வு அளித்துள்ளோம். அவர்கள் பணியில் தொடர்வர்” என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை, முதல்வர் என்ற முறையில் ஏற்கிறேன். ஆனால், தனிப்பட்ட முறையில் ஏற்க முடியாது. இந்த நாட்டின் குடிமகள் என்ற அடிப்படையில், என் கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது. ஒருசிலர் செய்த தவறுக்காக, இந்த, 25,000 பேரின் நியமனத்தை ரத்து செய்துள்ளதை ஏற்க முடியாது. இது, இந்த, 25,000 பேரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல, அவர்களை சார்ந்துள்ள குடும்பங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த உத்தரவு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசிப்பேன். சமீபத்தில், ஒரு நீதிபதி வீட்டில் பணக்குவியல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்காக அந்த நீதிபதி டிஸ்மிஸ் செய்யப்படவில்லையே; பணியிட மாற்றம்தானே செய்யப்பட்டார். அதுபோல், இந்த ஆசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கலாமே. இந்த உத்தரவை வழங்கிய முதல் நீதிபதி இப்போது ஒரு பாஜக எம்.பி. ஆவார். இந்தத் தீர்ப்புக்கு வழிவகுத்ததில் பாஜகவும் சிபிஎம் கட்சியும் சதி செய்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த தீர்ப்பால் பாதிக்கப்பட்டுள்ள கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள தெற்கு 24 பர்கானாஸில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியரான பிரதாப் ராய்சௌத்ரி, "ஒரு ஆண் வேலையை இழந்தால், அது அவரது குடும்பத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். வீட்டுக் கடன்கள், மாத தவணைகள் மற்றும் பலர் அவரைச் சார்ந்து இருக்கிறார்கள். இவை எல்லாம் இனி முடிந்துவிடும்" என்று அவர் கூறினார்.
மற்றொரு ஆசிரியரான அமித் ரஞ்சன், "நாங்கள் படித்துத்தான் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று, வேலையும் பெற்றோம். சிலர் ஊழலில் ஈடுபட்டார்கள். மாநில அரசின் ஆதரவு இல்லாமல் அது சாத்தியமில்லை. ஆனால் எங்களைப் போன்ற களங்கமற்றவர்கள் எங்கள் வேலைகளில் தொடர முடியும் என்று எதிர்பார்த்தார்கள். இந்தத் தீர்ப்பு எங்கள் வாழ்க்கையை அழித்துவிட்டது. எனக்கு குடும்பம் உள்ளது. மாதந்தோறும் இ.எம்.ஐ. உள்ளது. இனி, நான் என்ன செய்வது. எனக்கு 25-26 வயதாக இருந்தால் வேறொரு தேர்வை எழுதி தேர்ச்சி பெற முடியும். ஆனால், எனக்கு இப்போது 39 வயது. இனி, நான் எந்த வேலைக்குத் தகுதி பெறுவேன்? மூன்று மாதங்களில் அதே தேர்வை எழுதலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதே போட்டித் தேர்வில் என்னால் தேர்ச்சி பெற முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஊழலில் ஈடுபட்டவர்களுக்கும், ஈடுபடாதவர்களுக்கும் தீர்ப்பு ஒரே மாதிரியான தண்டனையை வழங்கியது. நான் என் வாழ்நாள் முழுவதும் நேர்மையாக இருந்தேன், என் கல்வியாளர்கள் நல்லவர்கள். இது நியாயமற்றது. மாநில அரசாங்கமே இதற்குப் பொறுப்பு” எனத் தெரிவித்துள்ளார்.