உத்தரப் பிரதேசத்தில் தம்பதி ஒன்றுக்கு ரூ.4 லட்சத்திற்கு கடத்தப்பட்ட குழந்தை விற்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனு, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. இதில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்த நீதிபதிகள், அதேவேளையில் அதிகாரிகளின் கருணையற்ற அணுகுமுறையையும் கண்டித்துள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றம், “ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்றம் அலட்சியமாகக் கையாண்டது. இதனால் பல குற்றவாளிகள் தலைமறைவாகி உள்ளனர். இந்தக் குற்றவாளிகள் சமூகத்திற்குக் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளனர். ஜாமீன் வழங்கும்போது உயர்நீதிமன்றம் குறைந்தபட்சம் ஒவ்வொரு வாரமும் காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் போலீசார் கண்காணிக்கத் தவறிவிட்டனர்.
மேலும், ஒரு மருத்துவமனையில் இருந்து புதிதாகப் பிறந்த குழந்தை கடத்தப்பட்டால், முதல் படியாக அந்த மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள், குழந்தை கடத்தல் வழக்குகளில் ஆறு மாதங்களுக்குள் விசாரணைகளை முடிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதில் ஏதேனும் மெத்தனம் காட்டினால் அது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு வரும் 21ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. முன்னதாக, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.