ராகுல் நார்வேகர், உச்ச நீதிமன்றம்
ராகுல் நார்வேகர், உச்ச நீதிமன்றம் twitter
இந்தியா

சிவசேனா MLA-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: மகாராஷ்டிர சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Prakash J

மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவி வகித்துவந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

Eknath Shinde - Uddhav Thackeray

இதையடுத்து சிவசேனா கட்சி பிளவுபட்டு ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவுடன் இணைந்து புதிய கூட்டணி அரசை உருவாக்கி முதல்வரானார். இந்த நிலையில், ஒருங்கிணைந்த சிவசேனாவுக்கு எதிராகச் செயல்பட்டதாக ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி உத்தவ் தாக்கரே அணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ‘கடந்த மே மாதம் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், தகுதி நீக்க மனுக்கள் மீது சபாநாயகரே உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறிய பின்னரும் சபாநாயகர் ராகுல் நார்வேகர் தாமதப்படுத்துகிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கு இன்று (ஜூலை 14) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், ’தகுதி நீக்க விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறார். தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால், குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் மகாராஷ்டிரா சபாநாயகர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக கடந்த வாரம், தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக, மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகர் சிவசேனாவின் இரு அணிகளை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.