சிறையில் உள்ள கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க கோரிய பொதுநல மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. எனினும், ஏதேனும் ஒரு காரணத்துக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு மட்டும் வாக்குரிமை உண்டு. இந்நிலையில், சிறையில் உள்ள கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க வேண்டும் என சுனிதா சர்மா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், குற்றவியல் வழக்குகளில் கடுமையான தண்டனை பெறாதவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குகூட அனுமதி வழங்கப்படுகிறது என்றும், தண்டனை பெறாத விசாரணைக் கைதிகள் வாக்களிக்க உரிமை வழங்கப்படாதது ஏன் எனவும் வினவினார்.
தொடர்ந்து, சிகிச்சை பெறுபவர்கள், முதியோர் இல்லங்களில் உள்ளோருக்கு வசதியாக உருவாக்கப்பட்டுள்ள மொபைல் வாக்களிக்கும் முறையில், சிறையில் உள்ள கைதிகள் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.