இந்தியா

வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே சிஏஏக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும்: உச்சநீதிமன்றம்

வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே சிஏஏக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும்: உச்சநீதிமன்றம்

webteam

நாட்டில் நடைபெற்று வரும் வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், விசிக, சிபிஐ, முஸ்லிம் லீக் உள்ளிட்டவற்றில் சார்பில் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் விசாரிக்கப்படாமல் உள்ளன. இந்தச்சூழலில், குடியுரிமைத் திருத்தச் சட்டம், செல்லுபடியாகும் என அறிவிக்கக்கோரி மூத்த வழக்கறிஞர் வினித் டான்டா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததோடு, அதை விரைவாக விசாரிக்கவும் தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைத்தார்.

அப்போது ஒரு சட்டம் இயற்றப்படும்போது அது அரசியல் சாசனத்திற்கு‌ உட்பட்டு இயற்றப்படுகிறதா, இல்லையா என்பதை தீர்மானிப்பது மட்டும்தான் எங்கள் வேலையே தவிர அதற்கு நாங்களாகவே அரசியல் சாசன அந்தஸ்தை வழங்க முடியாது என தலைமை நீதிபதி தெரிவித்தார். தற்போது நாடு முழுவதும் கடினமான சூழல் நிலவுவதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி எங்களின் நடவடிக்கை அமைதியைக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என்றார்.

ஆனால் தற்போதுள்ள சூழலில் இந்த மனுக்களை விசாரித்தால் அமைதியான சூழலை உருவாக்க முடியும் என நினைக்கவில்லை எனத் தெரிவித்த தலைமை நீதிபதி இந்த விவகாரம் தொடர்பான வன்முறைகள் எப்போது நிறுத்தப்படுகிறதோ அப்போதுதான் இந்த மனுக்கள் விசாரிக்கப்படும் என்று கூறினார்.