இந்தியா

ப.சிதம்பரம் முன்ஜாமின் : உடனடியாக விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு

ப.சிதம்பரம் முன்ஜாமின் : உடனடியாக விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு

webteam

மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவில் உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மனுவை தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ, அமலாக்கத்துறை முயற்சித்து வருவதாக காங்கிரஸ் வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார். இதையடுத்து ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவில் உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்தார். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவெடுப்பார் எனவும் அதுவரை கைது செய்ய தடையில்லை எனவும் நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கக் கோரி ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் முறையிட்ட நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.