ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. மறுபுறம், இந்த தாக்குதல் தொடர்பாக, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கக் கோரி ஃபதேஷ் குமார் ஷாஹு, முகமது ஜுனைத் மற்றும் விக்கி குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனு நீதிபதி சூர்ய காந்த் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ”பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான விஷயங்களில் நீதித்துறை ஏன் விசாரணையை மேற்பார்வையிட வேண்டும்? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எப்போதிலிருந்து இந்த விஷயங்களில் நிபுணர்களாக மாறினர்? இதுபோன்ற பொதுநல வழக்குகளை தாக்கல் செய்வதற்கு முன்பு பொறுப்புடன் இருங்கள். நமது படைகளை இப்படித்தான் நீங்கள் சோர்வடையச் செய்ய விரும்புகிறீர்களா? தற்போதைய நிலையில் இந்த மனுவை விசாரிக்க முடியாது. மத்திய அரசு விசாரணை செய்து வருகிறது. அப்படி இருக்கும்போது, அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டும். நாட்டின் மீதான பொறுப்பு உங்களுக்கும் உள்ளது. மேலும் விசாரணை அமைப்புகளுக்கு மன சோர்வை ஏற்படுத்தும் வகையில் மனு உள்ளது. வெளிமாநிலங்களில் உள்ள ஜம்மு – காஷ்மீர் மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்னை இருந்தால் உயர் நீதிமன்றத்தை அணுகலாம்” என்று உத்தரவிட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.