இந்தியா

'நீதிபதிகள் ஊழல்வாதிகள்' -பிரசாந்த் பூஷனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

webteam

இந்தியாவின் முன்னாள் நீதிபதிகள் ஊழல்வாதிகள் என பேட்டி அளித்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.

தெஹல்கா செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், இந்தியாவில் உள்ள முன்னாள் நீதிபதிகள் ஊழல்வாதிகள் என கூறினார். இதனையடுத்து  2009ம் ஆண்டு அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிற்து.

இந்நிலையில் இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால், பிரசாந்த் பூஷன் அளித்த பேட்டிக்கான விளக்கத்தை ஏற்கெனவே அவர் அளித்துள்ளதாக கூறினார்.

அதேபோல் "தெஹல்கா" பத்திரிகையின் ஆசிரியர் தருண் தேஜ்பால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், தனது மனுதாரர் இவ்விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்டதாக நீதிபதி முன்பு தெரிவித்தார். அதற்கு நீதிபதி இந்திரா பேனர்ஜி, இவ்விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்த வழக்கறிஞரின் விளக்கத்தையும்,செய்தி வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியர் மன்னிப்பையும் ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைப்பதாக  உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: கனடாவில் மீண்டுமொரு 'ஏ.ஆர்.ரஹ்மான் தெரு' - இசைப் புயலின் உருக்கமான பதிவு