உச்சநீதிமன்றம் காட்டம் முகநூல்
இந்தியா

குரூர புத்தி கொண்டவரை போல் அமலாக்கத்துறை செயல்படக்கூடாது - உச்சநீதிமன்றம் காட்டம்!

அமலாக்கத் துறை குரூர புத்தி கொண்டவரை போல் செயல்படக்கூடாது என, உச்ச நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக விஜய் மண்டல் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கோட்டீஸ்வர் சிங், சூர்யகாந்த், உஜ்ஜல் புயன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், அமலாக்கத் துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது எனவும், சட்டத்துக்கு உட்பட்டே செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தினர். மேலும், 5000க்கும் மேற்பட்ட வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்திருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே அமலாக்கத்துறை தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டனர்.

தொடர்ந்து கூறிய நீதிபதிகள், குற்றவாளி என ஒருவர் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், விசாரணையையும் நடத்தாமல் பல நாட்கள் அந்த நபரை சிறையில் வைப்பதை, வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளீர்கள் எனவும் அமலாக்கத் துறையை விமர்சித்தனர். அமலாக்கத்துறையின் பிம்பம் கவலை அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், மக்களின் சுதந்திரம் முக்கியம் எனவும் குறிப்பிட்டனர். மேலும், 5 அல்லது 6 ஆண்டுகள் ஒருவரை நீதிமன்ற காவலில் சிறையில் வைத்துவிட்டு பின்னர் அவரை விடுவித்தால், அதற்கு யார் பொறுப்பேற்பது எனவும் அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பினர்.