தூக்கு தண்டனையை நிறைவேற்றும் தற்போதைய முறையை ரத்து செய்து, குறைந்த வலி, வேதனையுடன் மரண தண்டனை வழங்க மாற்று வழிகளை கொண்டு வர வேண்டும் என்ற மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு, தூக்கு முறையை ரத்து செய்ய மறுத்தாலும், குறைந்தபட்ச வலி, மனித கண்ணியத்தை பாதுகாக்கும் மாற்று முறைகள் குறித்து மத்திய அரசு நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்யலாம் என தெரிவித்தது.
தூக்கு தண்டனையை நிறைவேற்றும் தற்போதைய முறையை ரத்து செய்து, அதற்கு பதிலாக வலியையும் வேதனையையும் குறைக்கும் மாற்று முறைகளை கொண்டு வரக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தூக்கு தண்டனையை நிறைவேற்றும் போது நீண்ட நேரம் வலி மற்றும் வேதனை ஏற்படுவதாகவும், அதற்கு பதிலாக விஷ ஊசி, துப்பாக்கியால் சுடுதல், மின்சாரம் செலுத்துதல் உள்ளிட்ட முறைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தூக்கு மூலம் மரண தண்டனையை நிறைவேற்றும் முறையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே நேரத்தில், மரண தண்டனையை நிறைவேற்றும் முறையை மாற்றுவது குறித்து மத்திய அரசு விரிவான ஆய்வை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை என்றும், மாற்று முறை அரசியலமைப்பின் நோக்கமான குறைந்தபட்ச வலி, வேதனையுடன் மனித கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் இருக்குமா என்பதை நிபுணர் குழு மூலம் ஆராயலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் வலுவான மருத்துவ அல்லது அறிவியல் ஆதாரங்கள் கிடைத்தால், தூக்கு தண்டனை நிறைவேற்றும் முறையின் அரசியலமைப்புச் சட்டப்பூர்வத்தன்மையை மீண்டும் ஆய்வு செய்வதற்கும் இன்றைய தீர்ப்பு தடையாக இருக்காது எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.