உச்ச நீதிமன்றம், ரன்வீர் அல்லபாடியா x page
இந்தியா

ஆபாச கருத்து | ”உங்கள் வீட்டில் ஏற்பார்களா?” யூடியூபரைக் கண்டித்த உச்ச நீதிமன்றம்.. கைது செய்ய தடை!

பொதுவெளியில் குடும்ப உறவுகள் தொடர்பாக சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த விவகாரத்தில் பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லபாடியாவை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

Prakash J

பிரபல யூடியூபரான ரன்வீர் அல்லபாடியா, நிகழ்ச்சி ஒன்றில் ஆபாசமான முறையில் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இது, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்தன. மேலும், அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அவருக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் பல எம்பிக்கள் புகார் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, ரன்வீர் அல்லபாடியா மன்னிப்பு கோரினார். அதுமட்டுமின்றி, தனது சமூக ஊடக தளங்களில் அந்நிகழ்ச்சி தொடர்பாக பதிவிட்ட அத்தனை பதிவுகளையும் நீக்கியிருந்தார். எனினும், "ரன்வீரை போன்றவர்கள் எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டனர். நான் அவனை எங்கேயாவது சந்தித்தால், யாரும் அவனை என்னிடமிருந்து காப்பாற்ற முடியாது” என ‘மகாபாரதம்’ சீரியலில் பீமனாக நடித்த முன்னாள் WWE மல்யுத்த வீரர் சவுரவ் குர்ஜார், ரன்வீருக்கு பகீரங்க மிரட்டல் விடுத்திருந்தார்.

ரன்வீர் அல்லபாடியா

இதற்கிடையே, அந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட கருத்துகளுக்காக தன்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு மற்றும் மிரட்டல்களுக்கு எதிராக ரன்வீர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ரன்வீர் அல்லபாடியா பேசியது ஆபாசம் இல்லையென்றால், வேறு எது ஆபாசம் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இவ்வழக்கில் எவ்வாறு நிவாரணம் கோர முடியுமெனவும் வினவியுள்ளது. ’ரன்வீர் அல்லபாடியா கூறிய கருத்துக்களை அவரது பெற்றோரோ, சகோதரியோ ஏற்கமாட்டார்கள்’ எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், ’புகழ்பெற்றவர் என்பதால் எதை வேண்டுமானாலும் பேச உரிமையில்லை’ என கண்டித்தது. இதுதொடர்பான வழக்குகளில் ரன்வீர் அல்லபாடியாவை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் உத்தரவிட்டது.

மேலும், ‘ரன்வீர் எந்த யூடியூப் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக் கூடாது. மகாராஷ்டிரா மற்றும் அசாமில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்கு தொடர்பாக எந்த மிரட்டல்கள் வந்தாலும், அவர் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பு கோரி மகாராஷ்டிரா மற்றும் அசாம் மாநில அரசுகளை நாடலாம்’ என உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய அரசு, மகாராஷ்டிர அரசு மற்றும் அசாம் அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றம்

வழக்கு விசாரணையின்போது, ரன்வீர் சார்பில் ஆஜரான உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் மகன் அபினவ் சந்திர சூட், தனது கட்சிக் காரருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நாக்கை வெட்டுபவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அதற்கு, அபினவைச் சாடிய நீதிபதிகள், யூடியூபரின் மொழிகளை நியாயப்படுத்துகிறீர்களா என்று கேள்வி எழுப்பினர்.