மணிப்பூர் கலவரம், உச்ச நீதிமன்றம்
மணிப்பூர் கலவரம், உச்ச நீதிமன்றம் file image
இந்தியா

தகுதி இல்லையா, ஆர்வம் இல்லையா? - மணிப்பூர் வன்முறையில் காவல்துறையை விளாசி தள்ளிய உச்சநீதிமன்றம்!

Prakash J

மணிப்பூர் மாநிலத்தில் ஆடைகளின்றி நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதோடு பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்ட இரு பழங்குடியின பெண்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது.

இன்றைய விசாரணையின்போது 6,000க்கும் அதிகமான முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மணிப்பூர் கலவரம்

அப்போது மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ’முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிவதாகவும், விசாரணை எதுவும் முழுமையாக முறையாக நடைபெற்றதாக தெரியவில்லை, மணிப்பூர் மாநிலத்தில் காவல்துறையினர் பொறுப்புகளை ஏற்காமல் இருந்துள்ளனர். அதைச் செய்ய அவர்களுக்கு தகுதி இல்லையா அல்லது ஆர்வம் இல்லையா? விசாரணை எதுவும் முழுமையாக நடைபெற்றதாக தங்களுக்குத் தெரியவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அதிக தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. வாக்குமூலங்கள் பதிவு செய்வதுகூட இன்னும் முடிவடையவில்லை.

மணிப்பூர் காவல் துறையினர் விசாரணை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்துவிட்டனர். மணிப்பூர் மாநிலத்தில் எந்தச் சட்ட ஒழுங்கும் இல்லை’ என அதிருப்தி தெரிவித்தார்.

மேலும் அவர், ‘மணிப்பூர் மாநிலத்தின் டிஜிபி என்ன செய்து கொண்டிருக்கிறார்? ஆதரவு கேட்டுவந்த பெண்களை காவல் துறையினரே வன்முறைக் கும்பலிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். அந்த காவல் துறையினரை டிஜிபி விசாரித்தாரா” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மேலும், இவ்விவகாரத்தில் மணிப்பூர் மாநில காவல் துறை தலைவர் டிஜிபி நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ஆகஸ்ட் 7ஆம் தேதி மதியம் 2 மணிக்கு அவர் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தின் முன்பாக ஆஜராகி விளக்கங்களை அளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக, முதல் தகவல் அறிக்கைகளின் எண்ணிக்கை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, மணிப்பூர் மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, மணிப்பூர் வன்முறை தொடங்கிய நாளிலிருந்து ஜூலை 25ஆம் தேதிவரை மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 6,496 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், வன்முறையில் 150 பேர் உயிரிழந்ததாகவும், 502 பேர் காயமடைந்துள்ளதாகவும், 5,101 தீ வைப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 11 முதல் தகவல் அறிக்கைகள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான வழக்குகள் எனவும், இவற்றை சிபிஐக்கு வழங்கலாம் எனவும் மணிப்பூர் மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எந்தெந்த பிரிவுகளின்கீழ் எத்தனை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை நீதிபதிகள் கேட்டனர். குறிப்பாக கொலை/பாலியல் வன்கொடுமை, தீ வைத்து எரித்தல், பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல், அமைதியைச் சீர்குலைத்தல், வழிபாட்டுத் தலங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.