இந்தியா

கே.எம்.ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக்குங்கள்! மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை

கே.எம்.ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக்குங்கள்! மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை

webteam

நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும்படி மத்திய அரசுக்கு கொலிஜியம் மீண்டும் பரிந்துரை செய்துள்ளது. 

உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு உத்தராகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்து மல்கோத்ரா ஆகியோரின் பெயர்களை மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் கொலிஜியம் பரிந்துரைத்தது. ஆனால், இந்து மல்கோத்ராவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மட்டுமே மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது. உயர் பதவிகளில் கேரள மாநிலத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தைச் சேர்ந்த கே.எம்.ஜோசப் உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. 

அவரது நியமனம் உச்சநீதிமன்ற நிர்ணயிக்கப்பட்ட அம்சங்களின் கீழ் வரவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுதொடர்பாக கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன்.பி.லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கே.எம்.ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

மேலும், சில நீதிபதிகளின் நியமனம் தொடர்பாக விவாதிக்க மீண்டும் மே 16-ம் தேதி கொலிஜியம் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியத்தின் முடிவே இறுதியானது என்ற நிலையில், கே.எம். ஜோசப்பின் பெயரை மத்திய அரசு திருப்பி அனுப்பியிருந்தாலும், மீண்டும் கொலிஜியம் பரிந்துரைப்பதால் அதை ஏற்க வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.