மரண தண்டனையை எப்படியெல்லாம் நிறைவேற்றுவது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், “பல்வேறு நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டு வருகின்றது. அதற்கு பதிலாக மின்சாரம் பாய்ச்சுதல், சுடுதல், விஷ ஊசி போடுதல் உள்ளிட்ட முறைகள் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஒருவர் கண்ணியத்துடன் உயிரிழப்பு என்பது அடிப்படை உரிமையில் ஒன்று. தற்போது நடைமுறையில் உள்ள தூக்கிலிடும் முறை அதிக வலியை கொடுக்கக் கூடியதாக உள்ளது. இதனால், தூக்குத் தண்டனைக்கு மாற்று முறையை கொண்டு வர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்ற முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தூக்கிலிடுவதை தவிர வேறு ஏதேனும் முறையில் மரண தண்டனையை நிறைவேற்றும் முறை உள்ளதா? என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், மரண தண்டனை மற்ற நாடுகளில் எப்படியெல்லாம் நிறைவேற்றப்படுகிறது என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.