சம்பல் உட்பட பல ஊர்களில் மசூதிகள் உள்ள இடங்களில் கோயில்கள் இருந்ததாக இந்து அமைப்புகள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் 1947 ஆகஸ்ட் 15இல் வழிபாட்டுத்தலங்கள் எப்படி இருந்தனவோ அதே நிலையில் பராமரிக்க 1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தல் சட்டத்தை உறுதியாக கடைப்பிடிக்க அரசுக்கு வலியுறுத்தல்கள் வந்தன. ஆனால், இச்சட்டத்தில் சில அம்சங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இதை விசாரித்த நீதிபதிகள் மத வழிபாட்டுத்தலங்களின் உரிமை கோருவது தொடர்பான வழக்குகளை ஏற்கக்கூடாது என்றும் ஏற்கனவே உள்ள வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்றும் தற்காலிக தடை விதித்திருந்தனர். இந்நிலையில் மத வழிபாட்டுத்தல சட்டத்தை திறம்பட செயல்படுத்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி வழக்குத்தொடுத்துள்ளார்.
வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான வழக்குகள் வரும் மாதம் 17ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்பட உள்ள நிலையில் அசாதுதீன் ஒவைசியின் மனுவும் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு தெரிவித்துள்ளது.