டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளுக்கு பிற மாநில விவசாயிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர்கள், கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் இவர்களை அரசியல் தலைவர்கள் பெரிய அளவில் சந்தித்ததாக தெரியவில்லை. தமிழக விவசாயிகள் சந்தித்து வரும் அதே பிரச்னையை தான் தாங்களும் சந்தித்து வருவதாக தெரிவித்தனர். ஊருக்கே உணவு அளித்த விவசாயிகள் இன்று உணவில்லாமல் தவித்து வருவதாகவும். தமிழக விவசாயிகளின் போராட்டம் வெற்றி அடைய இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.