இந்தியா

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு ஆதரவு: இருசக்கர வாகனத்தில் காஷ்மீர் செல்லும் தமிழக ஆசிரியை

webteam

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் இரு சக்கர வாகனத்தில் காஷ்மீர் வரை பயணம் மேற்கொண்டுள்ளார். 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 யை ரத்து செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சென்னையைச் சேர்ந்த ஆசிரியை ராஜலட்சுமி முன்னா என்பவர்  தனது இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான தனது பயணத்தை நேற்றுத் தொடங்கினார். 

சென்னையைச் சேர்ந்த இந்தி ஆசிரியர் ராஜ லட்சுமி முன்னா. வயது 45. இவர் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கன்னியாக்குமரியிலிருந்து காஷ்மீர் வரை தனது இருசக்கர வாகனத்தில் சுமார் 5000 கிலோ மீட்டர் பயணம் செய்கிறார். கன்னியாகுமரியில் இருந்து தொடங்கபட்ட இந்தப் பயணத்தை நேற்று அமைச்சர் பொன்.ராதாகிருஷணன் தொடங்கிவைத்தார். இந்த பயணத்தை செப்டம்பர் 1 ஆம் தேதி நிறைவு செய்வார் எனக் கூறப்படுகிறது. 

இந்த பயணம் குறித்து பேசிய பொன். ராதா கிருஷ்ணன், ‘கடந்த 72 ஆண்டுகளாக, சிறப்பு அந்தஸ்து மூலம் காஷ்மீர் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இவற்றுக்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துகள் ஏற்புடையது. தமிழக அரசியல் கட்சிகள், காஷ்மீர் விவகாரம் போன்று உரிமைகளை மீட்டெடுக்கும் விஷயங்களை அரசியல் ரீதியிலான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. இவற்றை நீண்ட கால உரிமைகள் மீட்கப்பட்டது என்ற கோணத்தில் தான் அணுக வேண்டும். முன்னாவின் இந்தப் பயணம் வெற்றி பெற பாராட்டுகள்’ என்றார்.