இந்தியா

ஊரடங்கு தளர்வு எதிரொலி: ’அதிதீவிர தொற்று பரவல்’ அபாயம்.!

JustinDurai

ஊரடங்கில் அதிக தளர்வு எதிரொலியாக அதிதீவிர தொற்று பரவல் ஏற்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தில் 5 கட்டத் தளர்வுகள் அளிக்கப்பட்டு, மக்கள் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளனர். அனைத்து அலுவலகங்களும் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. சென்னையைப் பொருத்தவரை செப்டம்பர் 23 வரை சீராக இருந்த கொரோனா பாதிப்பு, அதன் பிறகு அதிவேகமாக பரவி வருகிறது. இந்த‌ வேகத்துக்கு Super Spreading Event எனப்படும் அதிதீவிர தொற்று பரவல் தான் காரணம் என்கின்றனர் புள்ளியியலாளர்கள்.

உள்ளரங்‌கில் நடைபெறும் நிகழ்ச்சிகள், அலுவலகங்களில் கூட்டமாக அமர்ந்து வேலை செய்வது, உணவு உண்பது உள்ளிட்டவற்றால் Super Spreading Event காரணம் நிகழ்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

முகக்‌கவசம் அணிந்திருந்தாலும் ஒரு மீட்டர் இடைவெளியில் இருப்போருக்கு 5 முதல் 10 சதவிகிதம் தொற்று பரவுகிறது. உட்புற அரங்குகளில் 90 சதவிகிதம் வரை பரவுகிறது. இதைத் தடுக்க எளிய நடைமுறைகளைப் பின்பற்றினாலே போதும் என்கின்றனர் மருத்துவர்கள்.

 குளிர்சாதன வசதி கொண்ட உள்ளரங்குகள் மற்றும் அலுவலகங்களில் அதிதீவிர தொற்று பரவல் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து அரசு கூடுதல் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.