திருவனந்தபுரத்திலிருந்து மும்பைக்கு ஜூலை 1ல் புறப்படவுள்ள மகாராஜா சொகுசு ரயிலில் 8 நாள் சுற்றுலா செல்ல ரூ. 5 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
மகாராஜாவில் அப்படி என்ன ஸ்பெஷல்? ஒரு ரயில் பயணத்துக்கு ரூ. 5 லட்சமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். இதில் உள்ள சிறப்பம்சங்கள் தெரிந்தால் 5 லட்சம் பெரிதாகத் தெரியாது. தமிழ் கலாசார உணவு வழங்கப்படும் எனவும் ஐஆர்டிசி தெரிவித்துள்ளது. இந்த சொகுசு ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் 8 பகல், 7 இரவுகளில் பயணிக்க முடியும். பயணிகளுக்கு அவரவர் விரும்பும் அவரவர் மாநில உணவுகளும், வெளிநாட்டினருக்கான உணவுகளும் கிடைக்கும். அதை விட ஆச்சர்யமான ஒன்று தங்க தட்டில் சாப்பாடு தருவார்களாம். டீ, காபி கூட தங்க டம்ளர்களில் வழங்கப்படும் என ஐஆர்டிசி அறிவித்துள்ளது.
சொகுசு படுக்கையறை, சிறுவர்களுக்கு விளையாட தனி இடங்கள், பொழுது போக்கு அம்சங்களுக்கு தனி இடங்கள் என சகல வசதிகளும் ரயிலில் உள்ளது. இந்தியர்களுக்கு மட்டும் தனி ஆஃபராக பயணி தன்னுடன் ஒருவரை அழைத்து வரலாம். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. 5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 50 சதவீத கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு அந்தந்த மாநில வழக்கப்படி பாரம்பரிய முறையில் இசைக்கருவிகளுடன் வரவேற்பும் அளிக்கப்படுகிறது. இதுதவிர வெளிநாடு மற்றும் உள்நாட்டு வகை மதுபானங்கள் அடங்கிய பாரும் ரயிலின் உள்ளே உள்ளதாம். இந்த ரயிலில் பயணம் செய்வதற்காக முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது. ரயில்தானா இல்லை சொர்க்கமா என வியக்கும் அளவிற்கு சகல வசதிகளுடன் ஜொலிக்கிறது மகாராஜா.