இந்தியா

டெல்லி: கார் டயரில் சிக்கி, சுமார் 12 கி.மீ-க்கு சாலையில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண்

kaleelrahman

டெல்லியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் கார் ஒன்றின் அடியில் சிக்கி, 20 வயது பெண்ணொருவர் சுமார் 12 கிலோமீட்டருக்கு இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பெண் கடந்த சனிக்கிழமை, புத்தாண்டுக்கு முந்தைய நாளன்று, தன் தாயிடம் “அம்மா... வெளியே ஒரு நிகழ்ச்சிக்குப் போறேன். தாமதமாகதான் திரும்பி வருவேன்” என தனது தாயிடம் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். 20 வயதேயான அப்பெண், அன்று நள்ளிரவில் வீட்டுக்கு தனது ஸ்கூட்டரில் திரும்பிக்கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியதாக சொல்லப்படுகிறது. இதில், விபத்தை ஏற்படுத்திய காரின் அடியில் அவர் சிக்கியிருக்கிறார். இதை அறியாத கார் ஓட்டுநர் மற்றும் பிறர், காரை நிறுத்தாமல் சென்றதில் அப்பெண் காரில் சுமார் 12 கி.மீ வரை இழுத்துச்செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இச்சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இப்பெண் பற்றி விவரங்கள் சில வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி கடந்த ஆண்டுதான் இப்பெண்ணின் தந்தை உயிரிழந்திருந்திருக்கிறார். அதன்பின் நோய்வாய்ப்பட்ட தன் தாய் மற்றும் தனது ஆறு சகோதர சகோதரிகளுக்கு ஆதரவாக இவர் மட்டுமே இருந்துள்ளார். தனது குடும்ப பொறுப்பை தோளில் சுமக்கத் தொடங்கி இருக்கிறார். தனியார் நிறுவனமொன்றில் பகுதிநேரமாக வேலை செய்து அதன் மூலம் கிடைத்த வருவாயை தனது தாயின் டயாலிசிஸுக்கு கொடுத்துவந்திருக்கிறார் அவர்.

குடும்ப உறுப்பினர்களை காப்பாற்ற அவர் இரவு நேரங்களிலும்கூட பகுதி நேர வேலைகளுக்கு செல்வார் இவர் என சொல்லப்படுகிறது. விபத்து நடந்த அன்றைய தினமும் அப்படித்தான் சென்றிருக்கிறார். திரும்பி வருகையில்தான் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் சகோதரிகளில் ஒருவருக்கு திருமணமாகிவிட்ட நிலையில், மற்ற இரண்டு சகோதரிகள் - இரண்டு சகோதரர்களுக்கு இவர் மட்டுமே ஆதரவாக இருந்திருக்கிறார். தாயையும் இவரே கவனித்துக்கொண்டிருக்கிறார்.

எல்லா நாளையும் போலவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தாயிடம் அதிகாலை 2 - 3 மணிக்குத் திரும்பி வருவதாக சொல்லிவிட்டு வேலைக்குச் சென்றிருக்கிறார் அவர். ஆனால், அன்றைய தினம் அவருக்கு நேர்ந்த அந்த சோக சம்பவம் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இடியாய் இறங்கியுள்ளது. சம்பவத்தின்படி டெல்லியின் புறநகர் பகுதியில் அவர் சென்றுகொண்டிருந்தபோது, அங்கிருந்த கார் டயர் ஒன்றில் அவர் சிக்கியிருக்கிறார். அதில் சுமார் 12 கிலோமீட்டருக்கு அப்பெண் இழுத்துச்செல்லப்பட்டிருக்கிறார். அவர் கூச்சலிட்டதோ, சிக்கிக்கொண்டதோ கார் ஓட்டியவர்களுக்கு தெரியாமலேயே இருந்துள்ளது என சொல்லப்படுகிறது. 

இதுபற்றி அவர் தாய் கூறுகையில், “ 'ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறேன் தாமதமாகத் திரும்பி வருவேன்' என என்னிடம் சொல்லிவிட்டுச் சென்றிருந்தாள் என் மகள். அவளுக்காக நான் காத்திருந்தேன். கடைசியாக சனிக்கிழமை இரவு 9 மணிக்கு என் மகளிடம் பேசியபோதுகூட, விரைவில் வீட்டிற்கு வருவாள் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் அவள் வரவில்லை. காலை 10.30 மணிக்கு நான் அவளை அழைத்தேன். ஆனால், அவளுடைய எண்ணை தொடர்புகொள்ள முடியவில்லை.

காலையில், என் மகளின் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதாக போலீஸில் இருந்து எங்களுக்கு தகவல் வந்தது. அவர்கள் என்னை வரச் சொன்னார்கள். ஆனால், எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் என்னால் அங்கு செல்ல முடியாத நிலை. வர முடியாது என்று அவர்களிடம் சொன்னேன். இதையடுத்து என் வீட்டிற்கு ஒரு வாகனத்தில் வந்து, சிலர் என்னை சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே நான் என் மகள் எங்கே என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். அவளை பார்க்க வேண்டும், அவள் எப்படி காயப்பட்டாள், எவ்வளவு காயப்பட்டாள் என்று கேட்டேன். ஆனால், என் வேண்டுகோள் அவர்களது காதில் விழுந்ததாக தெரியவில்லை' என்றுள்ளார்.

ஒருகட்டத்தில் மகளுக்கு ஏற்பட்ட விபத்து பற்றி அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மிகவும் உடைந்துப்போயிருக்கிறார் அவர்.

இந்த செய்தி, நேற்று பரபரப்பான நிலையில், உள்ளூர்வாசிகள் சிலர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நீதி கோரி சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பெண்ணின் தாயார், போலீசார் போதுமான அளவு விசாரணை செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'இதை ஒரு விபத்து போல காட்ட காவல்துறையினர் முயற்சிக்கிறார்கள்' என்று கூறினர்.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய மாருதி பலேனோ காரில் பயணித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, சம்பவம் குறித்து விசாரிக்க தொடங்கினார். நேரம் செல்லச் செல்ல, அந்த பெண் ஆடையின்றி, கால்கள் உடைந்த நிலையில் இருக்கும் வீடியோக்கள் சில சமூக வலைதளங்களில் பரவியது. இதைக்கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அதேநேரம், அவரது உடலை பார்க்க கூட தங்களை அனுமதிக்கவில்லை என்று அந்தப் பெண்ணின் உறவினரொருவர் கூறியிருக்கிறார்.

'போலீசார் எங்களை அழைத்து எங்கள் பெண் விபத்துக்குள்ளானதாக எங்களுக்குத் தெரிவித்தனர். அவளுடைய மரணத்திற்கு காரணமான அனைவருக்கும் மரண தண்டணை வழங்க வேண்டும். அவர்கள் அவளுடைய குடும்பத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்' என்று அந்தப் பெண்ணின் அத்தை ஒருவர் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த யாருக்காவது இழப்பீடாக அரசுப் பணி வழங்க முடியுமா என்று அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

தற்போது வரையிலான விசாரணையில், அப்பெண் புத்தாண்டு அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்துக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஐவரும், தங்கள் நண்பர் ஒருவரிடம் இருந்து கார்-ஐ வாங்கி ஓட்டியுள்ளனர் என சொல்லப்படுகிறது. விபத்துக்குப்பின் அந்த வாகனத்தை அவர்கள் சேதமடைந்த நிலையில் நண்பரிடமே ஒப்படைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணின் சடலம், ஆடையின்றி வீதியிலிருந்த நிலையில், அங்குள்ள மக்கள் சிலரால் காலையில் காணப்பட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அளித்திருக்கும் தகவல்களின்படி, அவர்கள் அப்பெண்ணின் ஸ்கூட்டரை இடித்தது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அப்பெண் அந்த ஸ்கூட்டரிலிருந்து விழுந்ததையும் அவர்கள் கவனித்துள்ளனர். ஆனால் ஸ்கூட்டரில் இருந்து விழுந்த அவர், காரில் இழுத்துச்செல்லப்பட்டதை அவர்கள் அறியவில்லை என கூறியுள்ளனர். வெகு தொலைவுக்குப்பின் எதார்த்தமாக பார்த்தபோதுதான், அப்பெண் டயருக்கு அடியில் சிக்கியது தெரியவந்ததாகவும் பயத்தில் சடலத்தை விட்டுவிட்டு காரை மட்டும் எடுத்துச்சென்றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.