இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் காவல் டிசம்பர் 21 தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதே வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே வந்துள்ளனர். ஆனால் பலமுறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த சுகேஷின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
இதனால் அவரது நீதிமன்றக் காவல் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கிடையே காவல்துறை சார்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் சுகேஷின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 21ஆம் தேதி வரை நீட்டித்தும், அவரை மீண்டும் சிறையில் அடைக்கவும் டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டது.