இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ஸ்ரீநகர் விமான நிலையம் மூடப்பட்டது

webteam

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ஸ்ரீநகர் விமான நிலையம் மூடப்பட்டு சிஆர்பிஎப் வீரர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்  விமான நிலையம் அருகே இருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில் அதிகாலையில் பயங்கரவாதிகள் நுழைந்து தூக்குதல் நடத்தத் தொடங்கினர். இதையடுத்து உடனடியாக சுதாரித்த பாதுகாப்புப் படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வளாகத்தில் இருக்கும் பயங்கரவாதிகளை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

அதிகாலையில் இருந்து தற்போது வரை சண்டை நீடித்து வருகிறது. இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர். விமான நிலையம் மூடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் செல்லும் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் சாலையில் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து காத்திருக்கின்றன. பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.