sugar ani
இந்தியா

சர்க்கரை விலை உயர்வுக்கு செக்.. எத்தனால் உற்பத்திக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

அதே நேரத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும், பெட்ரோலுடன் எத்தனாலைக் கலப்பதை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது.

Prakash J

உள்நாட்டில் சர்க்கரை விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், அதற்கு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கவும் கரும்புச் சாறு, சர்க்கரைப் பாகு மற்றும் பி-ஹெவி மொலாசஸ் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியா உலகின் முக்கிய சர்க்கரை உற்பத்தியாளர்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும் அதிக உள்நாட்டு நுகர்வையும் கொண்டுள்ளது. இந்த நிலையில், பருவமழைப் பற்றாக்குறை அல்லது கரும்பு விளைச்சல் மாற்றங்களால் உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டு விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அதன் விலை உயர்வதைத் தடுக்க, உணவு நுகர்வுக்கான சர்க்கரை இருப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில், கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால், சர்க்கரைப் பாகு மற்றும் பி-ஹெவி மொலாஸ் ஆகியவற்றின் கொள்முதலுக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

sugarcane

எத்தனால் உற்பத்திக்காகக் கரும்பைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதன் மூலம், சர்க்கரை தயாரிப்பதற்கு அதிக அளவு கரும்பு கிடைப்பதை உறுதி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முடிவு, புதிய எத்தனால் விநியோக ஆண்டின் தொடக்கமான நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும், பெட்ரோலுடன் எத்தனாலைக் கலப்பதை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது.

கரும்புச் சாறு, கரும்புப்பாகு மற்றும் தானியங்களைப் பயன்படுத்தி எத்தனாலை உற்பத்தி செய்யலாம். எத்தனால் உற்பத்திக்காகக் கரும்பிலிருந்து பெறப்படும் சில மூலப்பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம், சர்க்கரையின் விலை உயர்வையும் கட்டுக்குள் வைக்கலாம். மேலும் பெட்ரோலில் எத்தனால் கலக்கும் இலக்கு பாதிக்கப்படாமல் இருக்க, மக்காச்சோளம், சேதமடைந்த உணவு தானியங்கள் மற்றும் உபரி அரிசி போன்றவற்றிலிருந்து எத்தனால் தயாரித்து விநியோகிக்க மாற்று ஏற்பாடுகள் ஊக்குவிக்கப்படுகிறது.

ethanol fuel

இதற்கிடையே, புதிய விநியோக ஆண்டிற்காக சுமார் 11 பில்லியன் லிட்டர் எத்தனாலைக் கொள்முதல் செய்ய, அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கூட்டு டெண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில் கரும்புச் சாறு, சர்க்கரைப் பாகு அல்லது பி-ஹெவி மொலாசஸ் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் வாங்குவதற்கான ஏலம் கோரப்படவில்லை எனினும், எண்ணெய் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிற மூலப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனாலைத் தொடர்ந்து கொள்முதல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.