நாராயண மூர்த்தி, சுதா மூர்த்தி எக்ஸ் தளம்
இந்தியா

70 மணி நேர வேலை | முதல்முறையாக வாய் திறந்த சுதா மூர்த்தி.. கணவருக்கு ஆதரவா?

70 மணி நேரம் வேலை குறித்து மாநிலங்களவை உறுப்பினரும், என்.ஆர்.நாராயண மூர்த்தி மனைவியுமான சுதா மூர்த்தி பதில் அளித்துள்ளார்.

Prakash J

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி மற்றும் லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனத் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் ஆகியோர் அவ்வப்போது, அதிக பணி நேரம் குறித்துப் பேசி வருகின்றனர். அதாவது, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தினைக் தெரிவிக்கின்றனர். இவர்களுடைய கருத்துக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், மீண்டும்மீண்டும் இந்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினரும், என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தி முதல்முறையாக, 70 மணி நேர வேலை குறித்து பதில் அளித்துள்ளார்.

நாராயண மூர்த்தி, சுதா மூர்த்தி

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “மக்கள் தீவிரமாகவும் ஆர்வத்துடனும் ஏதாவது செய்ய எதிர்நோக்கும்போது நேரம் ஒருபோதும் வரம்பாக மாறாது. எனது கணவர் பணம் இல்லாமல், அர்ப்பணிப்புள்ள சக ஊழியர்களுடன் இன்ஃபோசிஸைக் கட்டியெழுப்ப முடிவு செய்தபோது, அவர்கள் 70 மணிநேரம் அல்லது சில நேரங்களில் இன்னும் அதிகமாக வேலை செய்ததால் மட்டுமே அது சாத்தியமானது; இல்லையெனில் அது சாத்தியமாகியிருக்காது. தனது கணவர் மட்டுமல்ல; பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்ற பிற தொழில்களில் உள்ளவர்களும் 90 மணி நேரம் வேலை செய்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரை, எனக்கு நேரமில்லை என்று நினைக்காமல், அதை அனுபவிக்க வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். அதன் காரணமாகவே, நான் கூடுதல் நேரம் வேலை செய்கிறேன். தற்போது எனது கணவரைவிட அதிகமாக வேலை செய்கிறேன். அவர் எனக்குப் பின்னால் துணை நிற்கும் ஒரு சக்தியாக உணர்கிறேன். ஒவ்வொரு வெற்றிகரமான பெண்ணுக்கும் பின்னால், ஒரு புரிந்துகொள்ளும் ஆண் இருக்கிறார். எனவே, எனது கணவரை நான் ஆதரித்தேன்.

நாராயண மூர்த்தி, சுதா மூர்த்தி

நான் வேலை செய்யும்போது, ​​எனது கணவர் எனக்கு ஆதரவளிக்கிறார். அதைத்தான் நான் வாழ்க்கை என்று நினைக்கிறேன். பணக்காரராக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, அழகாக இருந்தாலும் சரி, அசிங்கமாக இருந்தாலும் சரி அனைவருக்கும் கடவுள் 24 மணி நேரம் கொடுத்திருக்கிறார். நீங்கள் அதை எப்படிச் செலவிட விரும்புகிறீர்கள் என்பது உங்களுடையது. நீங்கள் எதையும் ஆர்வத்துடன் செய்ய விரும்பினால், அதற்கு நேரம் தேவை. நீங்கள் உங்கள் வேலையில் ஆர்வமாக இருந்தால், உங்கள் துணைவர் அதை ஆதரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.