இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்தியப் பயணத்தை ஒத்திவைக்குமாறு சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய குடியரசு தினம் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம்.
அந்த வகையில், இந்தியாவின் 72-வது அடுத்த குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்திய பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து போரிஸ் ஜான்சன் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனவரி 26-ம் தேதி அன்று நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்யுமாறு பிரதமர் மோடியை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அதே போல் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பயணத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 4ம் தேதி நிலவரப்படி, 26,626 கொரோனா நோயாளிகள் இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய வாரத்தை விட 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.