(முன்னாள் எம்.பி ஜாய்ஸ் ஜார்ஜ்)
ஆதிவாசி இன மக்களுக்கு அரசு வழங்கிய நிலத்தை அபகரித்ததாக கூறப்படும் புகாரில், முன்னாள் எம்.பி ஜாய்ஸ் ஜார்ஜ் மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் இருந்த 32 ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்து தேவிகுளம் உதவி ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வட்டவடா ஊராட்சியில் கொட்டகாம்பூர் கிராமத்தில் ஆதிவாசி இன மக்களுக்கு வழங்கப்பட்ட 32 ஏக்கர் அரசு நிலத்தை முன்னாள் இடுக்கி மக்களவை உறுப்பினர் ஜாய்ஸ் ஜார்ஜ் அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவ்வாறு ஆதிவாசி இன மக்களிடம் அபகரித்த நிலத்தை தனது பெயரிலும் தனது உறவினர்கள் பெயரிலும் பட்டா வாங்கியதாகவும் அவர் மீது புகார் எழுந்தது.
இந்தப் பிரச்னை குறித்து தேவிகுளம் உதவி ஆட்சியர் விசாரணை நடத்தி வந்தார். இதையடுத்து, இடுக்கி முன்னாள் மக்களவை உறுப்பினர் ஜாய்ஸ் ஜார்ஜ், தங்களின் நிலம் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்கவும், நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் தேவிகுளம் உதவி ஆட்சியர் பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் ஜாய்ஸ் ஜார்ஜ் ஆஜராகாததோடு, ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்பதால். ஜாய்ஸ் ஜார்ஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் உள்ள 32 ஏக்கர் நிலத்தின் பட்டாவை ரத்து செய்து தேவிகுளம் சார் ஆட்சியர் ரேணு ராஜ் உத்தரவிட்டுள்ளார்.