6 ஆவது கூட்டத்தொடர் ஜனநாய படுகொலையின் சான்று என்று மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மாநிலங்களவையில் ஜனநாயகத்தின் விழுமியங்கள் பற்றி வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க பேசியுள்ளார். மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை என்பதை அவரும் அறிந்திருப்பார். 150க்கும் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் கேட்கப்படாமலேயே 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
மக்களின் அடிப்படை சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் சீர்குலைத்துள்ள பெகாசஸ் பற்றி ஒரு நிமிடம் கூட விவாதிக்க மறுத்து, 19 மசோதாக்களை விவாதமே இன்றி நிறைவேற்றி, அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே கூட்டத்தொடரை முடித்துவிட்டது ஒன்றிய அரசு. நாடாளுமன்றம் என்ற மதிப்புமிகு அவையை கேலிப் பொருளாக ஆக்கி இருக்கிறது ஆளும்கட்சி. எங்கள் குரல்கள் ஏன் கேட்கப்படவில்லை? இது என்ன ஜனநாயகம் என்று நாங்கள் கேட்கிறோம். கட்சி சாராத நடுநிலை பொறுப்பு வகிக்கும் வெங்கையா நாயுடு எங்கள் உரிமைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் கொஞ்சம் பேச வேண்டும் என கேட்கிறோம். 6 ஆவது கூட்டத்தொடர் ஜனநாய படுகொலையின் சான்று.” எனத் தெரிவித்துள்ளார்.