செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
JSSC-CGL தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், ஆட்சேர்ப்பு நடைமுறையில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தேர்வர்கள் முன்வைத்து வருகின்றனர். தங்களது கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி மற்றும் தண்ணீரைப் பீய்ச்சியடித்ததாக கூறப்படும் நிலையில், மாணவர் தலைவர் தேவேந்திர மஹதோவும் போலீஸ் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் 9 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த நிலையில், போலீசாரால் தாக்கப்பட்டதாகவும், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக, மாணவர்கள் தங்களது உரிமைகள் மற்றும் எதிர்காலத்துக்காக போராடும் நிலையில், அவர்களுக்கு எதிராக வன்முறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது ஏன் என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கும் மாணவர்களின் போராட்டங்களுக்கும் போலீசார் நடவடிக்கையில் வேறுபாடு காட்டுகிறார்களா என்ற விவாதமும் உருவாகியுள்ளது.
போராட்டம் தொடர்பாக ‘Cockroach Janata Party’ நிறுவனர் அபிஜீத் தீப்கேவும் போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்கள் அரசியல் நோக்கத்துடன் போராடவில்லை என்றும், அவர்களின் கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, மாணவர்கள் மீது போலீசார் நடத்திய நடவடிக்கையைக் கண்டித்து ஜார்க்கண்ட் பாஜக மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தியது. இதனால் போராட்ட விவகாரம் அரசியல் ரீதியாகவும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் நிலவும் கல்வி உள்கட்டமைப்பு குறைபாடுகளைச் சீரமைக்கும் நோக்கில் நாடு முழுவதும் பிரசார இயக்கம் ஒன்றை முன்னெடுக்கப் போவதாகவும் CJP அறிவித்துள்ளது. கிராமப்புற பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மாணவர்களுக்குச் சிறந்த கல்விச்சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.