prince gajendra babu pt web
இந்தியா

”மற்ற மாநிலங்களிலும் தொடரும் நீட் மரணங்கள்; ஆனால் போராட்டங்கள் இல்லையே?” - பிரின்ஸ் கஜேந்திர பாபு

Angeshwar G

நீட்தேர்வும்.. தொடரும் மரணங்களும்

நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து குரல் கொடுத்த வண்ணமே இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு எதிராக தனது உயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த சம்பவம் நீட் தேர்விற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டியது. அப்போதிருந்து நீட்டுக்கு எதிராக மக்கள் குரல் தொடர்ச்சியாக குரல் கொடுத்த வண்ணமே இருக்கின்றனர். பல்வேறு அமைப்புகளும் நீட்டுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

prince gajendra babu

சமீபத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக ஆளுநர் பேசியதும் அடுத்த சில தினங்களில் நிகழ்ந்த இரு மரணங்களும் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுக நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியது. நீட் தேர்வில் திமுக அரசியல் செய்வதாக பாஜகவினர் தொடர் குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தானில் கோட்டா நகரில் நீட் பயிற்சிக்காக படித்து வந்த மாணவர்கள் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட தேர்வுக்கு பின் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் மட்டுமே நீட் மரணங்கள் நடப்பதாகவும் அதற்கு காரணம் திமுக தான் என பலர் குற்றம் சாட்டினர்.

”மற்ற மாநிலங்களில் நடப்பது இவர்களுக்கு தெரியாதா?”

இந்நிலையில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவைத் தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது,

“தமிழ்நாட்டின் ஆளுநர் காவல்துறையில் இன்டெலிஜன்ஸ் பிரிவில் தலைமைப் பொறுப்பில் இருந்ததாக சொல்கிறார்கள். அவருக்கு இன்டெலிஜன்ஸ் ரிப்போர்ட் கிடைக்கவே இல்லையா. நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் எந்தெந்த மாநிலங்களில் உள்ளது, எப்படி எல்லாம் பணம் வசூலிக்கிறார்கள் அதனால் மாணவர்கள் எப்படி எல்லாம் துன்பப்படுகிறார்கள் என்பதெல்லாம் தெரியாதா... தமிழ்நாடு பாஜகவின் தலைவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிதானே. அவர் செய்தித்தாள்களைப் படிக்க மாட்டாரா.. அவருக்கு ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா போன்ற மற்ற மாநிலங்களில் நடப்பது தெரியாதா?

”நீட்டை ஆதரிப்பதற்கு காரணம் நீட் சந்தையின் லாபத்திற்கு சம்பந்தப்பட்டது”

எல்லோருக்கும் எல்லாம் தெரியும். எங்கெல்லாம் கோச்சிங் செண்டர்ஸ் அதிகமாக இருக்கிறதோ அந்த இடங்களில் மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள் என்பது பத்திரிக்கைகளில் வரக்கூடிய செய்திதான். அனைவருக்கும் அனைத்தும் தெரியும். இருந்தபோதும் இவர்கள் நீட்டை ஆதரிப்பதற்கு காரணம் நீட் சந்தையின் லாபத்திற்கு சம்பந்தப்பட்டது.

ஒருவர் தனது வியாபாரத்தில் அதிகப்படியான லாபத்தை சம்பாதித்தால் தான் அரசியல் கட்சிகளுக்கு அவரால் நன்கொடைகளை கொடுக்க முடியும். அதனால் அதிகளவில் லாபம் ஈட்டக்கூடிய முக்கியமான தொழிலாக நீட் கருதப்படுகிறது. இந்த லாபத்தை ஆதரிப்பவர்கள் நீட்டை ஆதரிக்கிறார்கள். இது மாணவர் நலனுக்கு எதிரானது.

”பாடத்திட்டத்தை வடிவமைக்கும் போதே அதற்கான நோக்கம் என்பதை சொல்லிவிடலாம்”

பள்ளி மாணவர்களுக்கு உருவாக்கப்படும் பாடத்திட்டங்கள் வயதுக்கு ஏற்றவாறு இருக்குமா அல்லது எதன் அடிப்படையில் இருக்கும் என பிற நாடுகளில் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை எழுதக்கூடியவர்கள் யாரிடம் கேட்டாலும் அந்தந்த வயதுகளில் உள்ள குழந்தைகளின் புரிதல் சக்திகளுக்கு ஏற்பதான் பாடத்திட்டம் இருக்கும். பாடத்திட்டத்தை வடிவமைக்கும் போதே அதற்கான நோக்கம் என்பதை சொல்லிவிடலாம்.

நீங்கள் கொடுத்த பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு மாணவர் தனது கற்றல் திறனை வெளிப்படுத்தி இருப்பார். குறிப்பிட்ட வயதுக்கு தேவையான கற்றல் திறனை பெற்றுவிட்டால் அதற்கு அடுத்த வயதுக்கும் ஏற்ற கல்வித் திறனை அவர் பெறுவார் தானே.. அந்த நம்பிக்கையில் தான் மாணவர்களை ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்பிற்கு மாணவர்களை தேர்ச்சி கொடுத்து அனுப்புகிறீர்கள். இந்த நடைமுறையில் தான் மாணவர் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என வருகிறார்.

”அந்தந்த வயதிற்கு ஏற்ற தகுதியான பாடத்தை படிக்கிறார்கள்”

மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதற்கான கல்வியைத் தான் பெறுகிறார். அவர் மருத்துவமோ, பொறியியலோ, சட்டமோ படிக்கவில்லை. அவருக்கு கொடுக்கப்பட்ட, அந்த வயதிற்கு தகுதியான பாடத்தை படிக்கிறார். மேல்நிலைப் பள்ளியில் கல்வி வாரியம் கொடுத்த பாடத்தின் அடிப்படையில் அவர் கற்றுக்கொண்டதை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றால் அவரை கல்லூரிக்கு அனுப்புவது தானே நியாயம்.

”நூறு சதவீதம் மதிப்பெண் எடுத்த பிறகு இன்னொரு தகுதித் தேர்வு எதற்காக?”

கல்லூரியின் எண்ணிக்கை, அதில் உள்ள இடங்கள் குறைவாக இருந்தால் போட்டி ஏற்படும். அப்போது மேல்நிலைப் படிப்பில் அதிகளவில் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றீர்கள். இயற்பியல் வேதியியல், கணிதம், உயிரியல் என அனைத்து பாடத்திலும் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் அவர் தான் எந்த பாடத்தை தேர்ந்தெடுப்பது என தீர்மானிக்கலாம். இதற்கு பிறகு இன்னொரு தகுதித் தேர்வு என்பது எதற்காக.

”நீட் தேர்வு என்பது சூதாட்டம், சந்தையின் சூழ்ச்சி”

நுழைவுத் தேர்வு என்பது பயிற்சி மையங்களை மையமாக கொண்டதே தவிர மாணவர்களின் நலனை மையமாக கொண்டது அல்ல. நீட் தேர்வு என்பது அநியாயம் என சொல்லும் போது அதை எப்படி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். நீட் தேர்வு என்பது சூதாட்டம், சந்தையின் சூழ்ச்சி. அந்த சூதாட்டத்தில் ஒரு மாணவர் பகடையாக வைக்கப்படுகிறார், குடும்பத்தின் மொத்த சேமிப்பும் பயிற்சி மையங்களுக்கு செலவழிக்கப்படுவதை எந்த பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடியும்.

”வேதனையை புரிந்து கொண்ட அரசியல் கட்சிகள் இல்லை”

மற்ற மாநிலங்களில் போராடக்கூடிய மனநிலை இல்லை. மக்களின் கொதிப்பை, வேதனையை புரிந்து கொண்ட அரசியல் கட்சிகள் அதனை கோரிக்கைகளாக மாற்றுவது இல்லை. தமிழ்நாட்டில் மக்களது கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் உணர்ந்து கொண்டார்கள். அதுதான் வித்தியாசம்.

”ஒரு தேசியக் கட்சியின் தலைவர் உணராமலா ஒரு வாக்குறுதியை கொடுக்கிறார்”

Rahul Gandhi

ராகுல்காந்தி 2019 ஆம் ஆண்டு சேலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பேசும் போது, நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என சொன்னார். ஒரு தேசியக் கட்சியின் தலைவர் உணராமலா ஒரு வாக்குறுதியை கொடுக்கிறார். எந்த இடத்திலும் 18வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நெகடிவ் மதிப்பெண் என்பதே கிடையாது. ஆனால் அதை நீட் மூலமாக இந்தியாவில் வைத்துள்ளீர்கள். அது எப்படி சரியாகும்.

prince gajendra babu

”60 லட்சம் முதல் 1.25 கோடி இல்லாமல் மருத்துவப் படிப்பை படிக்க முடியாது”

அதிலும் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை எனும் போது சதவீதத்தை அடிப்படையாக கொண்டு வருகிறீர்கள். எடுக்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தனியார் கல்லூரி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்தாலும் அவர்கள் கேட்கும் கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்றால் அதற்கு அடுத்த மதிப்பெண்ணை பெற்றவருக்கு அந்த இடம் செல்கிறது. 13 முதல் 15 லட்சம் வரை இருக்கும் கட்டணம் கல்லூரியின் பெயருக்கு ஏற்ப அதிகமாகும். அதில் கிட்டத்தட்ட 20 முதல் 25 லட்சம் வரை வசூலிக்கிறார்கள். 5 ஆண்டுகளுக்கு 60 லட்சம் முதல் 1.25 கோடி இல்லாமல் மருத்துவப் படிப்பை படிக்க முடியாது. அப்படியானால் யாரால் பணம் கட்ட முடியுமோ அவர்கள் தானே சேருவார்கள்.

"மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை”

இந்தியா முழுவதிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளனர். ஆனால் அந்த மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் நீட் வருவதற்கு முன் நம் மாநிலத்தில் கூட நுழைவுத் தேர்வு இருந்தது. நுழைவுத் தேர்வு மாணவர்களை பாதிக்கிறது என்பதை உணர்ந்து தான் அதை ஆராய்வதற்கு வல்லுநர் குழு பரிந்துரையில் நுழைவுத் தேர்வை ரத்துசெய்து சட்டம் இயற்றியுள்ளோம்.

அனுபவத்தில் கிடைத்ததை கொண்டே சொல்கிறோம், நாங்கள் மதிப்பெண்களைக் கொண்டே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்கிறோம் என சொல்கிறோம். வலுவான பாடத்திட்டம், அதை மாணவர்கள் கற்க ஏற்ற சூழல் உருவாக்கி தருகிறோம், மருத்துவக் கல்வியில் எந்த முறைக் கேடுகளும் நடைபெறாமல் வெளிப்படியான மாணவர் சேர்க்கையை நடத்துகிறோம் என சொல்கிறோம். இதற்கு மேல் ஒரு மாநில அரசால் எந்த உத்தரவாதத்தை கொடுக்க முடியும். இதில் மாநில அரசை நம்பமாட்டேன் என சொல்வது எந்த வகையில் நியாயம்” என்றார்.