ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் வாகன அணிவகுப்பின் காரணமாக, 25க்கும் மேற்பட்ட மாணாக்கர் ஜே.இ.இ முதன்மை தேர்வில் பங்கேற்க முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விசாகப்பட்டினத்தின் சின்னமுசிடிவாடா பகுதியில், ஜே.இ.இ முதன்மை தேர்வுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணிக்கு தேர்வு தொடங்குவதாக இருந்த நிலையில், பவண் கல்யாணின் வாகன அணிவகுப்பு செல்வதற்காக, அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், 25க்கும் மேற்பட்ட மாணாக்கர், தேர்வு மையத்திற்கு தாமதமாக சென்றுள்ளனர். ஆனால், தாமதமாக வந்தர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால், மாணாக்கரும் பெற்றொரும் வேதனையடைந்துள்ளனர். தங்கள் பிள்ளைகளின் ஒராண்டு கல்வி வீணாகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், பவண் கல்யாணின் பயணத்திற்கும், மாணாக்கர் தாமதமாக சென்றதற்கும் தொடர்பில்லை எனவும், 8.30 மணிக்கு முன் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை எனவும், ஆந்திர காவல் துறையினர் விளக்கமளித்துள்ளனர்.