jharkhand students protest pti
இந்தியா

போட்டித்தேர்வு ரத்துக்கு ஜார்க்கண்ட் அரசு சம்மதம்.. ஆனாலும் போராட்டத்தை தொடரும் மாணவர்கள்! ஏன்?

14ஆவது அரசு துறை பணிகளுக்கான போட்டித் தேர்வை ரத்து செய்ய ஜார்க்கண்ட் அரசு ஒப்புக்கொண்ட போதிலும், சிபிஐ விசாரணை கோரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

PT WEB

ஜார்க்கண்டில் பணி நியமனத் தேர்வில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளை எதிர்த்து மாணவர்கள் ராஞ்சியின் முண்டா ஸ்டேடியத்தில் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். மாணவர் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், முறைகேடு நடந்த தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் சிபிஐ விசாரணைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மாணவர்கள் சட்டமன்றத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஜார்க்கண்டில் பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகின்றனர். இந்தசூழலில் தலைநகர் ராஞ்சியில் உள்ள முண்டா ஸ்டேடியத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ பிரதிநிதிகளுடன் அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஜார்கண்ட் போராட்டம்

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவ தலைவர்களில் ஒருவரான ரவீந்திர பாஸ்வான், முறைகேடு நடந்த தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட பெரும்பாலான கோரிக்கைகளை அரசுஏற்றுக்கொண்டதாக கூறினார். எனினும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசுமறுப்பதாக தெரிவித்தார். எனவே, திட்டமிட்டபடி இன்று சட்டமன்றத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என்றார்.

இந்தசூழலில் ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்தில் அரசியல் உள்நோக்கமும், தனிப்பட்ட நலன்களும் இருப்பதாக முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார். மாணவர்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மாணவர்களின் எதிர்காலத்தை அரசியலுக்காக சிலர் திசை திருப்புவதாக எச்சரித்தார். தேர்வுகளில் முறைகேடு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு மாணவர்களுடன் உறுதுணையாக நிற்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.