மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம் freepik
இந்தியா

குஜராத்: டியுஷன் செல்லாமல் இருக்க கடத்தல் நாடகமாடிய சிறுமி!

Prakash J

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் போபட்பாரா பகுதியைச் சேர்ந்த 8 வயது மாணவி, நேற்று (செப்.15) வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார். மகளைக் காணாத பெற்றோர் தேட ஆரம்பித்துள்ளனர். பின்னர், சிறிது நேரம் கழித்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது அந்தச் சிறுமி, தன் தாயாரிடம் ’நம்பர் பிளேட் இல்லாத கருப்பு நிற ஜீப்பில் வந்த முகமூடி அணிந்த மூன்று பேர் தன்னைக் கடத்திச் சென்றனர். கடத்திச் செல்லப்பட்டதாகவும், பிறகு, ஒரு ரயில்வே மேம்பாலம் அருகே தன்னை இறக்கிவிட்டுவிட்டு, மற்றொரு சிறுமியைக் கடத்திச் சென்றனர்’ எனக் கூறியுள்ளார்.

மாதிரி புகைப்படம்

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளிக்க, அதன்பேரில் விசாரணை மேற்கொண்டனர். சிறுமியை அழைத்து பெற்றோரின் முன்னிலையிலேயே விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். அப்போது சிறுமி சொன்ன வழித்தடத்தில் ஜீப் ஏதேனும் சென்றதா எனச் சரிபார்ப்பதற்காக போலீசார் சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்துள்ளனர். மேலும் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டு, சாலைகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. கிரைம் பிரிவு அதிகாரிகளும் காவல் நிலையத்துக்கு வந்து, தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், சிறுமி சொன்னதுபோன்ற எந்தக் காட்சியும் அதில் பதிவாகவில்லை. ஒரு காட்சியில் சிறுமி தனியாக நடந்துசெல்வது மட்டுமே பதிவாகியிருந்தது. இதையடுத்து, சிறுமியிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, தான் கடத்தல் நாடகம் ஆடியதை சிறுமி ஒப்புக்கொண்டார். அவருக்கு டியூஷன் செல்வதே பிடிக்காத நிலையில், அன்று வீட்டுப்பாடமும் எழுதாததால் இந்த கடத்தல் நாடகத்தை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.