கோ-கார்ட் வாகன டயரில் தலைமுடி சிக்கி இளம்பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவியான ஸ்ரீ வர்ஷினியும் அவரது நண்பர்களும் புதன்கிழமை மாலை ஹைதராபாத்தின் குர்ரம் குடாவில் உள்ள ஒரு விளையாட்டு மையத்தில் கோ-கார்டிங் எடுத்து ஓட்டி வந்துள்ளனர்.
அப்போது ஸ்ரீ வர்ஷினியின் தலைமுடி எதிர்பாராதவிதமாக கோ-கார்ட் வாகனத்தின் டயரில் சிக்கிக்கொண்டது. இதனால் நிலைகுலைந்த அவர் சாலையில் விழுந்தார். கோ-கார்ட் வாகனமும் அவர்மீது விழுந்துள்ளதாக தெரிகிறது. பலத்த காயமடைந்த ஸ்ரீ வர்ஷினியை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மீர்பேட் காவல் நிலைய ஆய்வாளர் மஹேந்தர் ரெட்டி கூறுகையில், ‘’அந்த பெண் கோ-கார்ட் ஓட்டுகையில் ஹெல்மெட் அணிந்துள்ளார். ஆனாலும் தலைமுடி டயரில் சிக்கி, நிலைகுலைந்து விழுந்து சாலையில் பலமாக மோதி விழுந்ததால் உயிரிழந்துள்ளார்’’ என்றார்.
இந்நிலையில் கோ-கார்டிங் அமைப்பாளர்களின் அலட்சியம் காரணமாகவே தனது மகள் விபத்தில் சிக்கிவிட்டதாக ஸ்ரீ வர்ஷினியின் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இச்சம்பவம் கோ-கார்ட் வாகன பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.