இந்தியா

பள்ளியில் கொடுத்த சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி: 160 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பள்ளியில் கொடுத்த சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி: 160 பேர் மருத்துவமனையில் அனுமதி!

webteam

மும்பை மாநகராட்சி பள்ளியில் கொடுக்கப்பட்ட சத்துமாத்திரை சாப்பிட்ட மாணவி பலியானார். 160 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

மும்பையில் மாநகராட்சி பள்ளிகளில் ரத்தசோகையை தடுக்க, சுகாதாரத்துறை சார்பில் இரும்புச்சத்து மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கோவண்டி பைங்கன்வாடியில், மாநகராட்சி உருது பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கும் அந்த மாத்திரைகள் வழங்கப்பட்டு இருந்தன. கடந்த திங்கட்கிழமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அந்த மாத்திரைகளை வழங்கினார்கள்.

அதைச் சாப்பிட்ட 12 வயது மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு செல்லவில்லை. புதன், வியாழக் கிழமைகளில் பள்ளிக்கு வந்திருந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு அந்த மாணவி திடீரென ரத்தவாந்தி எடுத்தார். சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக் கண்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளியில் வழங்கப்பட்ட இரும்புச்சத்து மாத்திரையை சாப்பிட்ட பின்தான், உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக, மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் அந்தப் பள்ளியில், விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவ, மாணவிகள் சிலர் தங்களுக்கும் மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் வருவதாகத் தெரிவித்தனர். 

இதையடுத்து உடனடியாக அங்கு படிக்கும் 160 மாணவ, மாணவிகளும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மும்பை மாநகராட்சியில் சுகாதரத்துறை அதிகாரி பத்மஜா கஸ்கர் கூறும்போது, ‘மாணவிகளுக்கு கொடுக்கப்பட்ட மாத்திரைகள் அனைத்தும் நன்றாக பரிசோதிக்கப்பட்ட பிறகே கொடுக்கப்பட்டது. 12 வயது மாணவி உயிரிழந்ததற்கான உண்மையான காரணம், பிரதேச பரிசோதனைக்குப் பின்பே தெரியவரும்’ என்று தெரிவித்தார். 

போலீசார் இந்த சம்பவம் பற்றி மேலும் விசாரித்து வருகின்றனர்.