காதலியை சூட்கேஸில் வைத்து ஹாஸ்டலுக்குள் அழைத்துச் சென்ற மாணவர் பாதுகாவலர்களின் சோதனையின்போது வசமாக சிக்கியுள்ளார். சூட்கேஸ் பெரிதாக இருந்ததால், உள்ளே என்ன இருக்கிறது என்று சோதித்தபோது, இளம்பெண் ஒருவர் வெளியே வந்த சம்பவம் பாதுகாவலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் சோனிபத்தில் இருக்கும் OP Jindal University-ல் பயின்று வரும் மாணவர் ஒருவர், விடுதியில் தங்கி பயின்று வருகிறார். இந்த நிலையில், விடுதிக்கு பெரிய அளவிலான சூட்கேஸை இழுத்து வந்துள்ளார். அப்போது, வாயிலில் இருந்த பாதுகாவலர்கள் சூட்கேஸை பார்த்து அதில் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளனர். பதில் சொல்ல முடியாமல் திணறிய மாணவர் அமைதியாக நின்ற நிலையில், சூட்கேஸ் அங்குமிங்குமாக அசைந்துள்ளது. உள்ளே ஏதே நெளிவதைப் பார்த்தபோது, சத்தமும் கேட்டிருக்கிறது.
’இது என்னடா விநோதம்’ என்று சூட்கேஸை திறந்துபார்த்தபோது பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஆம், இளம்பெண் ஒருவர் நல்ல உடல்நிலையோடு சூட்கேஸிற்குள் அமர்ந்திருந்ததை பார்த்து அதிர்ந்துபோனவர்கள், அவரை வெளியே மீட்டனர். மீட்கப்பட்ட அந்த இளம்பெண் யார்.. அதே பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறாரா.. என்ன பின்னணி என்பது குறித்து விவரம் தெரியாத நிலையில், விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சூட்கேஸில் இருந்த இளம்பெண், அதைக் கொண்டு வந்த மாணவரின் ’காதலி’ என்று சொல்லப்படுகிறது. யாருக்கும் தெரியாமல் விடுதிக்குள் அழைத்துச் சென்றபோது விடுதி காவலர்கள் சோதனையின்போது சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், சூட்கேஸை எடுத்துச் சென்ற மாணவர் மற்றும் அதற்குள் இருந்த இளம்பெண் ஆகிய இருவர் மீதும் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்ததா என்பது குறித்து விவரம் வெளியாக நிலையில், வைரலாகும் வீடியோவுக்கு பலரும் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.
இப்போதெல்லாம் சூட்கேஸ் இதுபோன்ற திருட்டுத்தனத்திற்கும் பயன்படுகிறதா என்றும், இது மாதிரியான சம்பவம் தங்களின் விடுதியில் கூட நடந்திருப்பதாகவும் பலரும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.