இந்தியா

ஸ்பெயின் நாட்டு பெண்ணை இந்தியாவில் இயற்கை விவசாயம் கற்க வைத்த ஊரடங்கு

webteam

பொதுமுடக்கத்தால் இந்தியாவில் சிக்கிக் கொண்ட ஸ்பெயின் சுற்றுலா பெண்மணி ஒருவர்,  இந்திய கலாச்சாரத்தையும், இயற்கை விவசாயத்தையும் கற்றுக்கொண்டுள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் கட்டட கலை வடிவமைப்பாளரான தெரசா சொரியானோ மஸ்கரோஸ். விடுமுறை காலத்தில் இந்தியாவைச் சுற்றிப்பார்க்கத் திட்டமிட்டிருந்த அவர்,  கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம்  குண்டப்பூர் கிராமத்திலுள்ள தனது சகோதரரின் நண்பரான கிருஷ்ணா புஜாரி வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் ஸ்ரீலங்காவைச் சுற்றிப்பார்த்து விட்டு, மே மாதத்தில் ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தார் தெரசா.

ஆனால் அந்த சமயத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பொதுமுடக்கத்தின் காரணமாக ஊர் திரும்ப இயலாத தெரசா, சிக்கிக் கொண்டதற்காக  வருத்தப்படவில்லை. மாறாக இந்தக் காலத்தில் இந்திய கலாச்சார உணவு வகைகள் , இயற்கை விவசாயம் உள்ளிட்டவற்றைக்  கற்றுக்கொள்வதற்கான முயற்சியை கையில் எடுத்தார். கிராமத்திலுள்ள விவசாயிகளிடம் ஐக்கியமாகிய தெரசா, தினமும் அவர்களுடன் சென்று விவசாயம், பாய்நெசவு உள்ளிட்ட பலவற்றைக் கற்றுக்கொண்டார். 

கிருஷ்ணா புஜாரியின் தாயான சிக்கம்மா புஜாரியும் தெரசாவுக்கு பால்கரத்தல், நெல் நடவு, வேர்கடலை சாகுபடி உள்ளிட்டவற்றை கற்றுக்கொடுத்துள்ளார். அனைத்தையும் ஆர்வமாகக் கற்றுக்கொண்ட தெரசா அத்துடன் ரங்கோலி கோல முறைகளையும், கன்னட மொழியையும் கற்றுள்ளார்.

இது குறித்து கிருஷ்ணா புஜாரி கூறும் போது “ ஊரடங்கால் சிக்கிக் கொண்ட தெரசா கடந்த நான்கு மாதங்களாக விவசாயம் சம்பந்தப் பட்ட பணிகளையும், நெசவு உள்ளிட்டப்பணிகளையும் கற்று வந்தார். எங்களுடனும் எங்களது கலாச்சாரத்துடனும் முழுவதுமாக ஐக்கியமாகிய தெரசா இந்திய உணவு தயாரிப்பு முறைகளையும் கற்றுத்தேர்ந்தார். சிக்கன் சுக்கா, மீன் கறி, சாம்பார் - இட்லி தற்போது அவருக்கு மிகவும் பிடித்த உணவுகளாக மாறிவிட்டன என்றார்.

இது குறித்து தெரசா கூறும் போது “ ஸ்பெயினில் இருந்து எனது தோழியுடன் வந்தேன். நான் கர்நாடகாவுக்கு வந்த போது, எனது தோழி மும்பையில் சிக்கிக் கொண்டார். அந்தச் சமயம்தான் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மும்பையில் இருந்த எனது தோழியை ஸ்பெயினுக்கு திரும்பச் சொல்லி விட்டேன். இந்தக் காலத்தைப் பயனுள்ள வகையில் கழிக்க நினைத்த நான் இங்குள்ள மக்களிடம் ஐக்கியமாகி பலவற்றைக் கற்றுக்கொண்டேன். அவர்கள் என்னை அவர்களில் ஒருவராகவே பார்த்தனர். நகர்புற சூழலை விட இங்கு மிக பாதுகாப்பாக உணர்ந்தேன்.” என்றார். 

கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, கடந்த வாரம் கோவா சென்ற தெரசா அங்கிருந்து ஸ்பெயின் கிளம்பினார்.