ASP
ASP pt desk
இந்தியா

திருப்பதி மலைப்பாதையில் தொடரும் வாகன விபத்துகள்: வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

webteam

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் தொடர்ந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகி பக்தர்கள் காயம் அடைந்து வருகின்றனர். இதற்குக் காரணம் அதிவேகம் மற்றும் அலட்சியமே என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மலைப்பாதையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திருமலை போக்குவரத்து போலீசார், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

temple

அந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு கூடுதல் எஸ்.பி. முனி ராமய்யா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “திருப்பதி மலைப்பாதையில் தினந்தோறும் அரசு போக்குவரத்து பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களை தவிர்த்து கார் மற்றும் இதர வாகனங்கள் என 20 ஆயிரம் வாகனங்கள் வந்து செல்கின்றன. இதில், முதலாவது மலைப்பாதை என அழைக்கப்படும் திருமலையில் இருந்து திருப்பதிக்குச் செல்லும் மலைப்பாதை 17 கிலோமீட்டர் மட்டுமே இருந்தாலும் 63 கொண்டை ஊசி வளைவுகள் அங்கு உள்ளன. அவற்றில் சில வளைவுகள் அபாயகரமான வளைவுகளைக் கொண்டது.

accident

இரண்டாவது மலைப்பாதை எனப்படும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லக்கூடிய மலைப்பாதை சாலை, 18 கிலோமீட்டர் தூரம் இருந்தாலும் ஆறு வளைவுகள் மட்டுமே அங்கு உள்ளன. இந்த மலைப்பாதை சாலையில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டுவதால் தொடர் விபத்துக்கள் ஏற்படுகின்றன. டெம்போ ட்ராவலர் மற்றும் துபான் என அழைக்கப்படும் வாகனங்கள் தொடர்ந்து இங்கு விபத்துக்குள்ளாகி வருகின்றன.

விபத்துகளுக்கு பின்னால் வாகன ஓட்டிகள் தகுதி இல்லாத வாகனங்களை கொண்டு வருவதும் மலைப்பாதையில் ஓட்டுவதற்கான போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும், அலட்சியமாக வாகனங்கள் ஓட்டுவதும்தான் காரணங்களாக உள்ளன. இது மட்டுமல்லாமல் மலைப்பாதையில் ஆங்காங்கே சிலர் வாகனங்களை நிறுத்தி செல்ஃபி மற்றும் போட்டோ எடுப்பதாலும் விபத்து ஏற்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, மலைப்பாதையில் செல்வதற்கான வாகனங்கள் பிட்னஸ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, பாதி வழியில் வாகனங்களை நிறுத்தவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.

AP police

போலவே வாகனத்திற்கு உண்டான இருக்கை எண்ணிக்கை மிகாமல் பயணிகள் இருக்க வேண்டும். தொலைதூரத்தில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் அவர்கள் தரிசன டிக்கெட் குறிப்பிட்ட நேரத்தில் முன்பதிவு செய்து கொண்டு வருவதால் நேரடியாக வந்து சுவாமி தரிசனம் செய்து உடனடியாக அவர்கள் ஊருக்கு புறப்படுகிறார்கள். இதனால் டிரைவர்களுக்கு சரியான தூக்கம் கிடைப்பதில்லை. அதனாலும் ஆங்காங்கே தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே டிரைவருக்கும் உரிய ஓய்வளித்து அதன் பிறகு செல்ல வேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மலைப்பாதை சாலையில் விபத்துக்கள் நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்களில் வேகத்தடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வேகக்கட்டுப்பாடு மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல 28 நிமிடங்களும் திருமலையில் இருந்து திருப்பதிக்கு 40 நிமிடங்களும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக மலைப்பாதையில் வேகமாக ஓட்டி வரக்கூடிய வாகனங்கள் திருமலைக்கு மீண்டும் வராத வகையில் தடை விதிக்கப்படுவதோடு அபராதமும் வசூலிக்கப்படும்.

accident

அலிபிரி சோதனைச் சாவடி அருகே போக்குவரத்துத் துறை மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் இணைந்து வாகனங்கள் மலைப்பாதை சாலையில் செல்வதற்காக பிட்னஸ் சான்றிதழ் பெற்றுள்ளதா என ஆய்வு செய்து அனுப்பும் நடைமுறையும் விரைவில் கொண்டு வரப்படும். மலைப் பாதையில் வரக்கூடிய வாகன ஓட்டிகள் முன்னாள் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாம். வெளியூரிலிருந்து வரக்கூடியவர்கள் முந்திச் செல்ல முயல்கின்றனர். மலைப்பாதை சாலையின் தன்மை அறியாமல் இப்படி முந்திச்செல்லும் அவர்கள், சில வளைவுகளிலேயே பயப்படுகின்றனர். இதனால் வாகனத்தை பாதிவழியிலேயே அவர்கள் நிறுத்தி விடுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே வாகனங்களை முந்தி செல்வதை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.