டெல்லி - NCRஐ தலைமையிடமாக கொண்டு செயல்படும் சலூன் ஹோம் சர்வீஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனம் தான் ’யெஸ்மேடம்’. இந்த நிறுவனம் சமீபத்தில் பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தம் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. ’யெஸ்மேடம்’ நிறுவனம் தன்னுடைய ஊழியர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த ஆய்வில் வேலையில் அதிகப்படியான மன அழுத்தம் இருப்பதாக ஊழியர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், அதுவல்ல அதிர்ச்சி தகவல்.
தங்களுக்கு மன அழுத்தம் இருப்பதாக சொன்ன ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பது தான் மிகப்பெரிய அதிர்ச்சியான தகவலாக தற்போது வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மனிதவள மேலாளர் (HR) அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், “அன்புள்ள குழு, சமீபத்தில், வேலையில் ஏற்படும் மனஅழுத்தத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளை புரிந்துகொள்ள நாங்கள் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதில், பலர் உங்களுடைய கவலைகளைப் பகிர்ந்துள்ளீர்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதில் உறுதிபூண்டுள்ள இந்நிறுவனம், உங்களின் கருத்துகளை கவனமாகப் பரிசீலித்தது. பணியிடத்தில் யாரும் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மன அழுத்தம் இருப்பதாகக் குறிப்பிட்ட ஊழியர்களை விடுவிப்பதற்கான முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது, மேலும் இதுகுறித்த விவரங்களும் வெளிவரும். உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. அன்புடன், மனிதவள மேலாளர், யெஸ் மேடம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மின்னஞ்சலின் அப்பட்டமான தொனியும், மன அழுத்தத்திற்கு ஆளான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான முடிவும், அவர்களின் கவலைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக ஆன்லைனில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பயனர் ஒருவர், “ இது ஒரு விநோதமான பணிநீக்கம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இண்டிகோவின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் இணை இயக்குநரான ஷிடிஸ் டோக்ராவும் தனது லிங்க்ட்இன் கணக்கில் இந்த ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து, "ஒரு நிறுவனம் உங்களை மனஅழுத்தத்தில் இருந்து நீக்க முடியுமா? இது ஒரு ஸ்டார்ட்அப்பில் நடந்ததுபோல் தெரிகிறது" என யெஸ்மேடம் நோக்கி கருத்து தெரிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரம் தொடர்ந்து இணையத்தில் எதிர்வினையாற்றி வருகிறது.