இந்தியா

தேர்தல் ஆதாயத்துக்கு ராணுவத்தைப் பயன்படுத்துவதா? முன்னாள் வீரர்கள் அவசர கடிதம்

தேர்தல் ஆதாயத்துக்கு ராணுவத்தைப் பயன்படுத்துவதா? முன்னாள் வீரர்கள் அவசர கடிதம்

webteam

தேர்தல் ஆதாயத்துக்கு, ராணுவத்தின் பெயரை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் தளபதிகள் 8 பேர் உட்பட 150 முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள் அவசர கடிதம் எழுதியுள்ளனர். 

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்க இருக்கிறது. முதல் கட்டத்தேர்தல் நேற்று நடந்தது. தேர்தலுக்காக, தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பிரசாரத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ராணுவம் குறித்து பேச தேர்தல் ஆணையம் தடை விதித் துள்ளது. புல்வாமா தாக்குதல் குறித்து பாஜக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் போஸ்டர்களை ஒட்டி வந்ததாலும் இந்திய ராணுவத்தை மோடி யின் சேனை என்று கூறி வந்ததாலும் இந்த தடை விதிக்கப்பட்டது. தடையை மீறியும் பாஜக தேர்தல் பிரசாரத்தில் ராணுவத்தை குறிப்பிட்டு வருவது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்நிலையில் முன்னாள் ராணுவ தளபதிகள், ரோட்ரிக்ஸ், சுனித் பிரான்சிஸ், ஷங்கர் ராய் சவுதிரி, தீபக் கபூர், கடற்படை முன்னாள் தளபதிகள் லட்சுமி நாராயணன் ராமதாஸ், விஷ்ணு பகவத், சுரேஷ் மேத்தா, விமானப்படை முன்னாள் தளபதி என்சி சூரி ஆகியோர் உட்பட 150 முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். 

அதில், ’’எல்லைப் பகுதியில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள் ஆதாயம் கோருவதை ஏற்க முடியாது, இது வழக்கத்துக் கு மாறானது. இது, முன்னாள் படை வீரர்கள் மத்தியில் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். ராணுவ சீருடைகள், சின்னங்கள், செயல்பாடுகளை அரசியல் நோக்கங்களுக்காக, கட்சிகள் பயன்படுத்துவதை உடன டியாக தடுத்த நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.