டெல்லி ஜந்தர் மந்தரில் இனி எந்த வகையான போராட்டமும் நடத்தக் கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஜந்தர் மந்தரில் நடத்தும் போராட்டத்தினால் ஓலி மாசு ஏற்படுவதாக சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதை விசாரித்த நீதிபதி ஆர்.எஸ் ரத்தோர் தலைமையிலான அமர்வு, அங்கு நடைபெறும் போராட்டங்கள் சுற்றுச்சூழல் விதிகளை மீறும் செயல் என்று குறிப்பிட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மாசில்லாமல் வாழும் உரிமையை பாதுகாக்க மாநில அரசு தவறி விட்டதாகவும் கூறியுள்ளது.
போராட்டம் நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்புகள், ஒலி பெருக்கிகள் உள்ளிட்டவற்றை ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என டெல்லி மாநகராட்சி கவுன்சிலுக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. அங்கிருக்கும் குப்பைகளை 4 வாரத்திற்குள் அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் எனவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழக விவசாயிகள் ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.