குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியின் வீட்டில் இருந்து திருடப்பட்ட நோபல் பரிசு சான்றிதழை காவல்துறையினர் மீட்டனர்.
சமூக ஆர்வலரும், குழந்தைகள் நல ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி தெற்கு டெல்லியின் அலக்நந்தா பகுதியில் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் அவரின் வீட்டில் புகுந்த திருடர்கள், அவரது வீட்டிலிருந்த நோபல் பரிசு சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய பொருட்களைத் திருடிச் சென்றனர். இதுகுறித்து சத்தியார்த்தியின் மகன் புவன் ரிபு காவல்துறையில் புகார் அளித்திருந்தார். கைலாஷ் சத்யார்த்திக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசினை நாட்டுக்கு அர்ப்பணித்து விட்டதால், அது குடியரசுத் தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளது.
திருட்டு சம்பவம் குறித்து அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வந்த டெல்லி காவல்துறையினர், இதுதொடர்பாக 3 பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நோபல் பரிசு சான்றிதழையும் காவல்துறையினர் மீட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைலாஷ் சத்யார்த்தியின் நோபல் பரிசு சான்றிதழ் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.