குடியுரிமை சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மசோதா கொண்டு வரப்படும் முன்பே பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது. இந்நிலையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு கடும் எதிர்ப்பையும் மீறி மசோதா நிறைவேறியது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள், மக்கள் இதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு வலுசேர்க்கும் விதமாக மேற்கு வங்க முதல்வர் மமதா, கேரள முதல்ல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ஆகியோர் குரல் எழுப்பியுள்ளனர்.
இந்த முதல்வர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் தங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாது என தெரிவித்துள்ளனர். ஆனால் முதல்வர்களால் அவ்வாறு செய்ய முடியுமா என்ற கேள்வி மறுபுறம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பதிலளித்துள்ள மத்திய அரசு, குடியுரிமை தொடர்பான விஷயங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று, இதை அமல்படுத்த முடியாது என சொல்ல மாநிலங்களுக்கு அதிகாரமில்லை, முதல்வர்கள் மறுக்கவும் முடியாது என தெரிவித்துள்ளது