மணிப்பூர் ஐஜிபி (செயல்பாடு) ஐ.கே.முய்வா
மணிப்பூர் ஐஜிபி (செயல்பாடு) ஐ.கே.முய்வா ani
இந்தியா

மணிப்பூர் வன்முறை: இதுவரை 175 பேர் உயிரிழப்பு.. 9,332 வழக்குகள் பதிவு.. காவல் துறை விளக்கம்!

Prakash J

குக்கி மற்றும் மெய்டீஸ் இன மக்கள் இடையே இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதம் மோதல் வெடித்தது. அதிலும், மணிப்பூர் வன்முறையின்போது கும்கி இனப் பெண்கள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு வீடியோவாக வெளியான செய்தி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனினும் அந்த வன்முறை இன்னும் அணையாமல் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையின் உச்சமாக இருக்கிறது.

மணிப்பூர் கலவரம்

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதிகூட, மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் பணியிலிருந்த ஆங்கோமாங் என்ற துணைக் காவலர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் இருவர் காயமடைந்தனர். முன்னதாக, கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் மா்ம நபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குக்கி இனத்தைச் சேர்ந்த 3 போ் உயிரிழந்தனர். இப்படி, இன்றுவரை தொடர்கதையாகி வரும் வன்முறைக்கு பல அப்பாவி மக்கள்தான் பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில், மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய இனக்கலவரத்தில், இதுவரை 175 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஐஜிபி (செயல்பாடு) ஐ.கே.முய்வா, “இந்த வன்முறையில் இதுவரை 175 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 76 உடல்கள் உரிமை கோரப்பட்டுள்ளன. 1,108 பேர் காயமடைந்துள்ளனர். 32 பேர் காணாமல் போயுள்ளனர். 4,786 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் கலவரம்

254 சர்ச்கள், 132 கோயில்கள் என 386 வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 5,712 தீ வைப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரத்தின்போது கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களில் 1,359 துப்பாக்கிகளும், 15,050 வெடி மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன. கலவரம் தொடர்பாக 9,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிஸ்னுபூர் மாவட்டம் இகாய் முதல் சுராசந்த்பூர் மாவட்டம் கங்க்வாய் வரையிலான பகுதிகளில் பாதுகாப்புத் தடைகள் அகற்றப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் போலீஸ், அசாம் ரைபிள் படை

இதற்கிடையே, மெய்டீஸ் இனக் குழுவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் இன்று டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கைச் சந்தித்து, ’மணிப்பூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளது.