லக்னோவில் இன்று நடைபெறும் டிஜிபி-கள் மாநாட்டில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்கிறார்.
சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை விவகாரங்கள் குறித்து ஒவ்வொரு வருடமும் டி.ஜி.பி-க்கள் மாநாடு மத்திய அரசால் நடத்தப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறவுள்ள 56வது மாநில காவல்துறை தலைவர்கள் மாநாடு நவம்பர் 20,21 என இரண்டு நாட்கள் நடைபெறும் என உள்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது. அதன்படி, இந்த கூட்டத்தில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல்துறை தலைவர்கள் ( DGP ) , மத்திய ஆயுத காவல் படையின் தலைவர்கள் பங்கேற்க உள்ளவர்.
இவர்களை தவிர 37 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மத்திய உளவுத்துறை மற்றும் மாநில உளவுத்துறையின் தலைவர்கள் வீடியோ காண்பிரன்ஸ் மூலம் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு கலந்து கொள்கிறார்.
இக்கூட்டத்தில், இணையதள குற்றங்கள், தரவுகளை கையாளுதல், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை, இடதுசாரி தீவிரவாதம், சிறைச்சாலை சீர்திருத்தம் மற்றும் போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவை பல முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது. இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை தலைவர் அரவிந்த் குமார், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு தலைவர் சமந்த் கோயல் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் .
இக்கூட்டம் கடந்த 2014ம் ஆண்டு - குவஹாத்தி, 2015ம் ஆண்டு - கட்ச் வளைகுடா , 2016ம் ஆண்டு - ஐதராபாத் , 2017ம் ஆண்டு - டெகான்பூர் , 2018ம் ஆண்டு - கெவடியா , 2019ம் ஆண்டு - புனேவிலும் நடைபெற்றது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கூட்டம் நேரடியாக நடைபெறவில்லை.