இந்தியா

ஸ்டேன் சுவாமி சட்டப்படியே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்: வெளியுறவுத்துறை அமைச்சகம்

Veeramani

பாதிரியார் ஸ்டேன் சுவாமி சட்டப்படியே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிறையில் இருந்த ஸ்டேன் சுவாமி உயிரிழந்தது குறித்து பல்வேறு சர்வதேச அமைப்புகள் விமர்சித்து வரும் நிலையில் இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.

திருச்சியில் பிறந்த ஸ்டேன் சுவாமி, மகாராஷ்டிராவின் பீமா கோரேகான் நினைவிடத்தில் வன்முறையை தூண்டும்விதமாக பேசியதாகக்கூறி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். 84 வயதான ஸ்டேன் சுவாமி மீது பொய் வழக்கு புனைந்து, அவர் உயிரிழக்க காரணமானவர்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இதேபோல, பழங்குடியின மக்களுக்காக போராடிய ஸ்டேன் சுவாமி உயிரிழந்த தகவல் அறிந்து மிகுந்த வேதனையில் ஆழ்ந்ததாக ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐரோப்பிய யூனியன் மனித உரிமை அமைப்புகள் இரங்கல் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் ஸ்டேன் சுவாமி மரணம் குறித்து விளக்கமளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், குறிப்பிட்ட குற்றச்சாட்டின் பேரில், ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அவரது ஜாமீன் மனுக்களை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்ததாகவும் தெரிவித்துள்ளது. ஸ்டேன் சுவாமிக்கு மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இந்தியாவில் தொடர்ந்து மனித உரிமைகள் காக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.